சென்னை: தங்கத்தின் விலையானது சர்வதேச பொருளாதாரச் சூழலின் மத்தியில், கமாடிட்டி மார்க்கெட்டைப் பொறுத்தே நிர்ணயம் செய்யப்படுகிறது. அது மட்டுமின்றி, சர்வதேச வங்கி, சர்வதேச அரசியல் சூழல், அமெரிக்க வங்கிகளின் வட்டி விகிதம், பொருளாதார மந்தம் என பல்வேறு காரணங்களை முன்வைத்துதான் தங்கத்தின் விலையில் தினமும் ஏற்றம், இறக்கம் காணப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் உலக நாடுகளிடையே உருவாகி வரும் போரின் எதிரொலி மற்றும் பொருளாதார மந்தம் காரணமாகக் கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலையில் ஏற்றத்தை மட்டுமே சந்தித்து வந்தது. ஆனால், சமீபமாக அவ்வப்போது குறைந்து வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.640 உயர்ந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
பொருளாதார மாற்றம் காரணமாக நூற்றுக்கணக்கில் அதிகரித்து வந்த தங்கத்தின் விலை, அவ்வப்போது குறைந்து வந்தது. இருப்பினும் அதில் நகைப்பிரியர்களுக்கு பெரிதளவில் மகிழ்ச்சி இல்லை. ஏனென்றால், 100களில் அதிகரிக்கும் தங்கம், குறையும் போது 10களில் குறைவது என்ன நியாயம் என ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். இதற்கிடையே கடந்த ஏப்ரல், 1,160 குறைந்ததால், மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தனர்.
அதனையடுத்து, தற்போது வரை நகையின் விலை பெரிய மாற்றத்துடன் ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த 5 நாட்களுக்கு முன்னர், அதாவது ஏப்.29ஆம் தேதி கிராமுக்கு 30 ரூபாய் குறைந்த தங்கம் ஏப்.30ஆம் தேதி 10 ரூபாய் அதிகரித்தது. பின்னர், மே 1 உழைப்பாளர்கள் தினத்தன்று கிராமுக்கு ரூ.115 அதிரடியாகச் சரிந்தது.
அதையடுத்து மே 2ஆம் தேதி அதிரடியாக ரூ.80 அதிகரித்தது. இந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) கிராமுக்கு ரூ.100 சரிந்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் 55 ஆயிரத்தைக் கடந்த தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு குறைந்துள்ளது. அதாவது கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி ஒரு சவரன் ரூ.55,120க்கு விற்பனையானது. தற்போது வரை ரூ.2,200 குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
சென்னையில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6 ஆயிரத்து 615க்கும், ஒரு சவரனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு சவரன் ரூ.52 ஆயிரத்து 920க்கும் விற்பனையாகிறது. மேலும், 24 கேரட் தங்கம் ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்து 728க்கு விற்பனையாகிறது. ஆனால் வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல், கிராம் வெள்ளி ரூ.87-க்கும், ஒரு கிலோ வெள்ளி கட்டி ரூ.87 ஆயிரமாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (மே 3):
- 1 கிராம் தங்கம் (22கேரட்) - ரூ.6,615
- 1 சவரன் தங்கம் (22கேரட்) - ரூ.52,920
- 1 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.7,216
- 1 சவரன் தங்கம் (24-கேரட்) - ரூ.57,728
- 1 கிராம் வெள்ளி - ரூ.87
- 1 கிலோ வெள்ளி - ரூ.87,000