சென்னை: இந்திய மக்கள் பொதுவாகவே சேமிப்பைத் தங்கத்தில் தான் முதலீடு செய்கின்றனர். அதற்குக் காரணம் விலைவாசி அதிகரிக்கும் போது தங்கத்தின் விலையும் சேர்ந்து அதிகரிக்கும் என்ற எண்ணத்தில் தான். தற்போது, இந்தியாவில் பண வீக்கம் காரணமாகவும், சர்வதேச அளவிலான மாற்றங்கள் காரணமாகவும் தங்கத்தின் விலை தாறுமாறாக அதிகரித்து வருகிறது.
நாளுக்கு நாள் புதிய உச்சத்தை நோக்கி பயணிக்கும் தங்கம் விலையைக் காணும் போது மக்கள் மனதில் ஒருவித அச்சம் தோன்றுகிறது. இதற்கேற்ப சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் நலச் சங்கத்தின் பொதுச் செயலாளரும் இந்த வருடத்திற்குள் தங்கத்தின் விலை 60 ஆயிரத்தைக் கடக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.
53 ஆயிரத்தை நெருங்கிய தங்கம்: என்னதான் தங்கத்தின் விலை அதிகரித்தே வந்தாலும், நகைக் கடைக்கு வரும் மக்களின் எண்ணிக்கை மட்டும் குறைய வில்லை எனவும், தேவை அதிகமாக இருக்கும் வரை தங்கத்தின் விலையும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கும் எனவும் நகை முதலீட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இன்று தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.840 அதிகரித்து ரூ.52,920 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மார்ச் 28ஆம் தேதி 50 ஆயிரமாக இருந்த தங்கம் இன்று புதிய உச்சத்துடன் 53 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அதாவது கடந்த 10 நாட்களில் சுமார் ரூ.2 ஆயிரத்து 920 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதாவது சென்னையில், இன்று (சனிக்கிழமை) காலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.105 அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.6 ஆயிரத்து 615க்கும், ஒரு சவரன் ரூ.52 ஆயிரத்து 920க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதேபோல, வெள்ளி கிராமுக்கு ரூ.2 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.87க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.87 ஆயிரமாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் (ஏப்ரல் 6):
- 1 கிராம் தங்கம் (22கேரட்) - ரூ.6,615
- 1 சவரன் தங்கம் (22கேரட்) - ரூ.52,920
- 1 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.7,216
- 1 சவரன் தங்கம் (24-கேரட்) - ரூ.57,728
- 1 கிராம் வெள்ளி - ரூ.87
- 1 கிலோ வெள்ளி - ரூ.87,000