டெல்லி : பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான சுரிந்தர் சாவ்லா தனது பதவியை ராஜினாமா செய்ததாக பேடிஎம் பிராண்ட் உரிமையாளரான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி சுரிந்தர் சாவ்லா தனது பதவியை ராஜினாமா செய்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தனிப்பட்ட காரணங்கள் மற்றும் புதிய தொழில் வாய்ப்புகளை பெரும் பொருட்டு சுரிந்தர் சாவ்லா தனது பதவியை ராஜினாமா செய்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் வரும் ஜூன் மாதம் 26ஆம் தேதி வரை அவர் அந்த பதிவியில் தொடர்வார் என்றும், இடைப்பட்ட காலத்தில் அவர் வெளியேற விரும்பும் பட்சத்தில் இரு தரப்பு பேச்சுவார்த்தைக்கு பின் முடிவு எட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரிசர்வ் வங்கியின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக சுரிந்தர் சாவ்லா நியமிக்கப்பட்டார். இந்நிலையில், பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கி நிறுவனத்தை பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பின்னர் தொடர்ந்து இயங்க இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்தது.
மேலும், வாடிக்கையாளர்கள் டெபாசிட் தொகையினை மாற்றுவது, ப்ரீபெய்டு, வேலட், பாஸ்டேக் உள்ளிட்ட காரணங்களுக்காக மார்ச் 15ஆம் தேதி வரை பேடிஎம்க்கு ஆர்பிஐ கால அவகாசம் வழங்கியது. இதையடுத்து பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து விஜய் சேகர் சர்மா விலகினார்.
இதையடுத்து பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கியை மீண்டும் கட்டமைக்கும் நோக்கில் புதிய இயக்குநர்கள் குழு நியமிக்கப்பட்டது. முன்னாள் மத்திய வங்கி தலைவர் ஸ்ரீநிவாசன் ஸ்ரீதர், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தேபேந்திரநாத் சாரங்கி, பேங்க் ஆப் பரோடா முன்னாள் நிர்வாக இயக்குநர் அசோக் குமார் மற்றொரு ஒய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ரஜினி சேகரி சிபல் ஆகியோர் பேடிஎம் பேமண்ட்ஸ் இயக்குநர்கள் குழுவில் இணைந்தனர்.
இந்நிலையில், பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகார் சுரிந்தர் சாவ்லா தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளார். முன்னதாக பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கியில் சேருவதற்கு முன்பு, சுரிந்தர் சாவ்லா ஆர்பிஎல் வங்கியில் பணி புரிந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : நாட்டில் தொலைத்தொடர்பு சாந்தாதாரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு! நகர்புறங்களை விட கிராமங்களில் குறைவது ஏன்? டிராய் கூறுவது என்ன? - TRAI