மும்பை: 2024-25ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கலின் போது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எஃப் அண்ட் ஓ வரி (Futures and Options Tax) மற்றும் பத்திரங்கள் மீதான பத்திர பரிவர்த்தனை வரி (Securities Transaction Tax) ஆகியவற்றை அதிகரிப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து, இந்திய பங்குச்சந்தை கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது.
இன்றைய நாள் தொடக்கத்தில் நிப்டி 50 புள்ளிகள் அதிகரித்து 24,568.90 என்று வர்த்தகம் ஆரம்பித்தது. சென்செக்ஸூம் 200 புள்ளிகள் அதிகரித்து 80,724 புள்ளிகளாக வர்த்தகம் ஆரம்பித்தது. இதனால் முதலீட்டாளர்கள் உற்சாகத்துடன் இருந்தனர்.
ஆனால், பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு, பிற்பகலில் வர்த்தகத்தில் ஒருவித திருப்பத்தை ஏற்படுத்தியது. அந்த வகையில், சென்செக்ஸ் 1,266.17 புள்ளிகள் குறைந்து 79,235.91ஆகவும், நிஃப்டி 435.05 புள்ளிகள் குறைந்து 24,074.20ஆகவும் கடுமையான சரிவைச் சந்தித்தது.
மேலும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தினருக்கு குறிப்பிட்ட நிதி சொத்துக்களின் மீதான மூலதன ஆதாய விலக்கு வரம்பை ஆண்டுக்கு ரூ.1.25 லட்சமாக உயர்த்தியதும், எஃப் அண்ட் ஓ வரி மற்றும் பத்திரங்கள் மீதான பத்திர பரிவர்த்தனை வரி ஆகியவற்றில் 0.02 சதவீதம் முதல் 0.1 சதவீதம் வரை அதிகரித்ததுமே பங்குகள் சரிவை சந்திப்பதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
இந்த பங்குச்சந்தை சரிவுகளுக்கு மத்தியில், லார்சன் அண்டு டூப்ரோ (Larsen & Toubro), பஜாஜ் பைனான்ஸ் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவற்றின் பங்குகள் சென்செக்ஸில் குறிப்பிடத்தக்க நஷ்டம் அடைந்தன. அதேநேரம், டைட்டன் மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய பங்குகள் லாபத்தைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: சுங்க வரி குறைந்தாலும் தங்கம் விலை உயரும்.. ஏன் தெரியுமா?