டெல்லி: உலகின் முன்னணி மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவில் பெரிய அளவில் ஆட்குறைப்பு பணியில் எலான் மஸ்க் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மின்சார வாகனங்களுக்கான சூப்பர் சார்ஜர் வணிக பிரிவின் தலைவர் ரெபெக்கா டினுச்சி மற்றும் புதிய தயாரிப்புகள் குழுவின் தலைவர் டேனியல் ஹோ ஆகியோரை எலான் மஸ்க் பணி நீக்கம் செய்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக, எலான் மஸ்க் டெஸ்லா நிறுவனத்தின் உயர் மட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெபெக்கா டினுச்சி மற்றும் டேனியல் ஹோ ஆகியோரின் கீழ் பணியாற்றிய 500க்கும் மேற்பட்ட ஊழியர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அண்மைக் காலமாக டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு சரிவு, மின்சார கார் உற்பத்தி சந்தையில் நிலவும் போட்டி மற்றும் ஸ்திரத்தன்மையற்ற சூழல் காரணமாக டெஸ்லா வாகனங்களுக்கான மவுசு குறைந்து வரும் நிலையில் இந்த பணிநீக்கம் நடந்து உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், பணியாளர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், திறமை, தேவை மற்றும் நம்பிக்கைக்கு பாத்திரமான சூழல்களை தவறவிடும் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என எலான் மஸ்க் தெரிவித்து இருந்ததாக கூறப்பட்டு உள்ளது. எலான் மஸ்க்கின் இந்த திடீர் நடவடிக்கையால் டெஸ்லா ஊழியர்கள் கலக்கம் அடைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அது மட்டுமின்றி, டெஸ்லாவின் பப்ளிக் பாலிசி குழுவையும் ஒட்டு மொத்தமாக கலைக்க எலான் மஸ்க் உத்தரவிட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், உலக முழுவதும் உள்ள டெஸ்லா நிறுவனத்தில் பணியாற்றும் 15 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
எலான் மஸ்கின் இந்த திடீர் அறிவிப்பால் டெஸ்லா பப்ளிக் பாலிசி குழு ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர். முன்னதாக, கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி, மின்சார வாகன தேவையின் மந்தநிலை காரணமாக, 10 சதவீதத்திற்கும் அதிகமான பணியாளர்களை பணி நீக்கம் செய்வதாக எலான் மஸ்க் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று, சமீபத்தில் கூகுள் நிறுவனமும் தனது பைத்தான் (python) குழுவில் உள்ள ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: சல்மான்கான் வீடு முன் துப்பாக்கிச் சூடு வழக்கு: போலீஸ் காவலில் இருந்த ஆயுத சப்ளையர் தற்கொலை! - Salman Khan Case Accused Suicide