மும்பை: 18வது மக்களவை தேர்தல் நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றன. மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (ஜூன்.4) எண்ணப்படுகின்றன. இந்நிலையில், வெளியான பெருவாரிய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொடர்ந்து 5 நாட்களாக இறங்கு முகத்தில் இருந்து சென்செக்ஸ் மற்றும் நிப்டி திடீர் உச்சம் தொட்டுள்ளது. வாரத்தின் முதல் நாள் திங்கட்கிழமை பங்குச் சந்தை தொடங்கிய நிலையில், இதுவரை இல்லாத அளவில் 4 சதவீதம் வரை பங்குகளின் மதிப்பு உயர்ந்தது. மும்பை பங்குச்சந்தை குறியிட்டு எண் சென்செக்ஸ் 2 ஆயிரத்து 777 புள்ளிகள் உயர்ந்து முதல் முறையாக 76 ஆயிரத்து 738 புள்ளிகளை பெற்றது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியிட்டு எண் நிப்டியும் 808 புள்ளிகள் அதிகரித்து இதுவரை இல்லாத அளவாக 23 ஆயிரத்து 338 புள்ளிகள் உயர்ந்து புது சாதனை படைத்தது. முன்னதாக கடந்த சனிக்கிழமை வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பிரதமர் மோடி ஆட்சி அமைப்பார் எனக் கணிக்கப்பட்டது.
இதன் காரணமாக பொருளாதார சந்தையில் புது ஊக்கம் பெற்று பங்குச்சந்தையின் மதிப்பு அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. Power Grid, NTPC, Larsen & Toubro, State Bank of India, Axis Bank, IndusInd Bank, ICICI Bank மற்றும் Mahindra & Mahindra உள்ளிட்ட மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள 30 நிறுவனங்களின் பங்குகளின் விலை ஏறுமுகமாக காணப்பட்டன.
கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதி ஆண்டில் இந்திய பொருளாதாரம் 8.2 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. தற்போது மீண்டும் பொருளாதாரம் புத்துயீர் பெற்ற நிலையில், உலகின் மிக வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக நாட்டின் நிலை மாறும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இதையும் படிங்க: தொடர்ந்து சரியும் தங்கம் விலை.. முதலீடு செய்ய சரியான நேரம்! - Today Gold And Silver Price