கோடா : ராஜஸ்தானில் காதல் விவகாரத்தில் இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பண்டி மாவட்டம் குஜரியா கா கெடா கிராமத்தை சேர்ந்த நரேந்திர குர்ஜர் என்ற இளைஞர், அருகாமையில் உள்ள ரெயின் கிராமத்தை சேர்ந்த இளம் பெண்ணை காதலித்து வந்து உள்ளார்.
இந்த காதல் விவகாரத்தை பிடிக்காத இளம் பெண்ணின் உறவினர்கள் இரு தரப்பை கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனது காதலியை சந்திக்க நரேந்திர குர்ஜர், தனது நண்பன் ஜுக்ராஜ் குர்ஜர் எனப்வருடன் காதலியின் கிராமத்திற்கு சென்று உள்ளார். இருவரும் கிராமத்திற்குள் வந்து இருப்பது குறித்து தகவல் அறிந்த பெண்னின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், ஒன்று திரண்டு இருவரையும் கடுமையாக தாக்கி உள்ளனர்.
இதில் தலை மற்றும் உடலின் பல்வேறு பாகங்களில் பயங்கர காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்ட சொட்ட இருந்த இருவரையும் சாலையோரம் உறவினர்கள் தூக்கி வீசியதாக கூறப்படுகிறது. இதனிடையே இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த இளைஞர்களின் உறவினர்கள் சாலையோரம் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த இருவரையும் மீட்டு பண்டி மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், நரேந்திர குர்ஜர் அதிக ரத்தம் வெளியேறிய காரணத்தால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மற்றொரு இளைஞர் உயிருக்கு போராடிய நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : மியான்மர் ராணுவ விமானம் மிசோரத்தில் விபத்து: பயணித்தவர்களின் கதி என்ன?