டெல்லி: ஹரியானா மாநிலத்தில் உள்ள கர்னால் மாவட்டத்தில் இருக்கும் முனக் கால்வாய் யமுனை நதி நீரை டெல்லிக்கு கொண்டு சேர்க்கிறது. இந்நிலையில், இந்த கால்வாய் நேற்று நள்ளிரவில் உடைந்ததாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, கால்வாய் நீர் வடமேற்கு டெல்லியின் பவானா பகுதியில் உள்ள ஜே.ஜே காலனிக்குள் புகுந்து குடியிருப்பு பகுதியை ஆறு போல் மாற்றியுள்ளது.
#WATCH | JJ Colony in Bawana remains inundated after barrage of Munak canal of North Delhi broke and water entered the nearby residential areas pic.twitter.com/XZfbeAp20H
— ANI (@ANI) July 11, 2024
இந்த நிலைக்கான காரணம் குறித்து பவானா காவல்துறையினர் ஒருவர் கூறும்போது, “முனக் கால்வாய் உடைந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை ஜே.ஜே காலனியின் ஜே(J), கே(K) மற்றும் எல்(L) பிளாக் பகுதியில் இருந்து முதலில் தண்ணீர் உள்ளே வந்தவாறு இருந்தது, பின் பவானா காலனி முழுவதும் தண்ணீரால் நிரப்பிவிட்டது .
மேலும், இந்த நீர் தேக்கத்தால் மக்கள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர், இதனை தவிர்க்கும் விதமாகத்தான் நள்ளிரவில் கால்வாய் உடைந்த தகவல் அறிந்த போதே முன்னெச்சரிக்கையாக தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை, பொது நலத்துறை மற்றும் டெல்லி மாநகராட்சி (MCD) ஆகிய அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் அளித்தோம். இதன் காரணமாக ஹரியானாவிலிருந்து வெளியேறும் கால்வாய் நீர் இன்று அடைக்கப்பட்டுள்ளது. இதனால் சோனிபட் வழியாக டெல்லியை அடையும் கால்வாய் பகுதியில் தற்போது நீரோட்டத்தின் வேகம் குறைந்துள்ளது” என்றார்.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “ஹரியானாவிலிருந்து டெல்லிக்கு யமுனை நதி நீரைக் கொண்டுவரும் துணை கிளை காய்வாய்களுள் ஒன்றான முனக் கால்வாய் உடைந்த நிலையில், பவானா பகுதிக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இந்த தண்ணீரை இன்று மதியம் பொழுதிற்குள் அகற்ற வழிவகை செய்துள்ளோம். இதனையடுத்து, இந்த கால்வாய் பாதையை மாற்றி வேறு கால்வாய் வழியாக நாளை முதல் நீர் வசதியும் மக்களைச் சென்றடைவதற்காக தொடர் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திரிபுராவில் 828 மாணவர்களுக்கு எய்ட்ஸ்.. மாநில அரசு வெளியிட்ட அதிர்ச்சி விளக்கம்!