ஹைதராபாத்: வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் முயற்சியில் தொழில் நுட்பங்கள் அசாதாரண வளர்ச்சி அடையும் வேளையில், அது மனிதனுக்கு எதிர் விளைவுகளையே அதிக அளவில் உருவாக்குகின்றன. இந்த தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்படும் அச்சுறுத்தல்களிலும் முதலில் பாதிக்கப்படுவது பெண்கள் தான்.
அப்படி சமீபத்தில் தொழில்நுட்பத்தில் புரட்சி ஏற்படுத்திய AI எனக் கூறப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், தொழில்நுட்ப வளர்ச்சியைத் தாண்டி அறிவு திருட்டுக்கும், ஆபாச செயல்களுக்கும் கருவியாகச் செயல்படுவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. அந்த வகையில், சமீபத்தில் AI தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் (Deep Fake) வீடியோ ஒன்று வைரலாகி பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
பின்னர் அதில் அரசு தலையிட்டு, உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த நிலையில், தற்போது இதே போன்ற ஒரு சம்பவம் மீண்டும் அரங்கேறி இருப்பது, தொழில் நுட்பங்கள் மீது பெரும் நம்பகமற்றத் தன்மையை உருவாக்கி உள்ளது. உலகளவில் ரசிகர்களைக் குவித்துள்ள பிரபல அமெரிக்கப் பாடகியான டெய்லர் ஸ்விஃப்ட்-இன் (Taylor Swift) முகத்தைக் கொண்டு, கடந்த வாரம் X சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வந்த டீப் ஃபேக் AI புகைப்படங்கள் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, இத்தகைய இழிவான செயலுக்கு சமூக ஆர்வலர்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களின் ஆதங்கத்தை, கமெண்டுகளின் வாயிலாக வெளிப்படுத்தி வந்தனர். இருப்பினும் AI தொழில் நுட்பத்தைக் கொண்டு உருவாக்கிய அப்புகைப்படங்கள் தொடர்ந்து பெருமளவில் பகிரப்பட்டும், பதிவிறக்கம் செய்யப்பட்டுமே வந்தது. இந்நிலையில், தற்போது டெய்லர் ஸ்விஃப்ட் குறித்து சர்ச் செய்வதை X வலைத்தளம் தடுத்து நிறுத்தியுள்ளது.
அதவாவது, X தளத்தில் டெய்லர் ஸ்விஃப்ட் எனத் தேடினால், "ஏதோ தவறாகிவிட்டது. மீண்டும் முயற்சிக்கிறது (Something went wrong. Try reloading) என வருகிறது. இதுகுறித்து நிறுவனத்தின் (X தளம்) தரப்பிலிருந்து, “இது பாதுகாப்பு முன்னெடுப்பு நடவடிக்கை” என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விளக்கம் பெரும் பேசுபொருளாகி உள்ளது. ஏனெனில் X தளம் அவரின் வெளிப்படையான டீப் ஃபேக் AI புகைப்படங்களை அகற்றுவதற்கு முன்னரே, அதனை மில்லியன் கணக்கானோர் பார்த்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
ஆகையால், X வலைத்தளத்தின் இத்தகைய பொறுமையான நடவடிக்கை பெரும் விமர்சனத்திற்குள்ளாகி உள்ளது. முன்பு X நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "பாடகி குறித்த அனைத்து போலியான புகைப்படங்களையும் எங்கள் குழுக்கள் அடையாளம் காண்டு, அதனை உடனடியாக அகற்றி, இதில் சம்பந்தப்பட்ட கணக்கின் (Account) மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவித்திருந்தது. மேலும், ஸ்விஃப்ட்-இன் போலி புகைப்படங்கள் வைரலானதை அடுத்து, AI ஆல் உருவாக்கப்பட்ட டீப் ஃபேக் மூலம் மக்கள் பாதிக்கப்படாமல் பாதுகாப்பதற்கான சட்டத்தை வெள்ளை மாளிகை கடந்த வாரம் முன்வைத்தது.
இதுகுறித்து வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன் பியர் கூறுகையில், "இது ஆபத்தானது என்றும், ஜோ பைடன் நிர்வாகம் முன்னுரிமை அளித்து வரும் விவகாரங்களில் AI பிரச்சினை முக்கியமான ஒன்று” எனவும் கூறியுள்ளார். தொடர்ந்து, மைக்ரோசாப்ட் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சத்யா நாதெல்லா, "பாடகி ஸ்விஃப்ட்-இன் வெளிப்படையான AI போலி புகைப்படங்கள் ஆபத்தானது மற்றும் பயங்கரமானது எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அயோத்தி ராமர் கோயிலால் வலுவடையும் இந்திய சுற்றுலாத் துறை! பில்லியன் பொருளாதாரத்தை எதிர்நோக்கும் உத்தர பிரதேசம்!