மும்பை: மகாராஷ்டிரா மாநிலம், சிந்துகர் மாவட்டத்தில் சோனுர்லி என்ற கிராமத்தைச் சேர்ந்த கால்நடை மேய்ப்பவர் ஒருவர், கடந்த சனிக்கிழமை இரவு நடுக்காட்டுக்குள் ஒரு பெண்ணின் அழுகையைக் கேட்டுள்ளார். பின்னர், அழுகை கேட்ட இடத்தைச் சென்றடந்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
ஏனென்றால், அங்கு ஒரு பெண் இரும்புச் சங்கிலியால் மரத்தில் கட்டப்பட்டு இருந்தார். பின்னர், இது குறித்து அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், அப்பெண்ணை மீட்டு மாநிலத்தின் கோங்கான் பகுதியில் உள்ள சவந்த்வாடியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
பின்னர், அவரது உடல் நிலை மற்றும் மனநிலையின் அடிப்படையில், மேல்சிகிச்சைக்காக கோவா மருத்துவக் கல்லூரிக்க்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், அவர் ஆபத்தான சூழலில் இருந்து விலகி விட்டதாகவும், மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும், மனதளவில் அவர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
STORY | Woman found chained to tree in Maharashtra's Sindhudurg; cops recover US passport photocopy
— Press Trust of India (@PTI_News) July 29, 2024
READ: https://t.co/72JcCbknYm pic.twitter.com/wIkWe3XO7f
அது மட்டுமல்லாமல், அவரது உடமைகளில் சில மருத்துவச் சீட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக போலீஸ் அதிகாரி கூறுகையில், “மீட்கப்பட்ட பெண்ணிடம் இருந்த அமெரிக்க பாஸ்போர்ட் நகல் கிடைத்துள்ளது.
அது மட்டுமல்லாமல், அவரது ஆதார் கார்டில் தமிழ்நாடு முகவரி இடம் பெற்றுள்ளது. இதன் அடிப்படையில் அவரது பெயர் லலிதா கயி (Lalita Kayi) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது விசா காலம் முடிவடைந்துவிட்டது. அவரது குடியுரிமை தொடர்பாக அவர் வைத்திருந்த அனைத்து ஆவணங்களையும் சோதித்து வருகிறோம்.
மேலும், வெளிநாட்டு பதிவு அலுவலகங்கள் உடனும் போலீசார் தொடர்பு கொண்டுள்ளனர். இவர் இந்தியாவில் கடந்த 10 வருடங்களாக இருந்துள்ளார் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவருடைய சுயவிவரத்தை அறிய அப்பெண் தயார் நிலையில் இல்லை.
கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக அப்பெண் ஏதும் சாப்பிடாமல் இருந்துள்ளார். அவர் கட்டப்பட்டிருந்த பகுதியில் கனமழை பெய்துள்ளது. அவர் எத்தனை நாட்கள் மரத்தில் கட்டப்பட்டு இருந்தார் என எங்களுக்குத் தெரியவில்லை. அப்பெண்ணின் கணவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும், தனது மனைவியை கட்டிப்போட்டுவிட்டு அவர் தப்பி ஓடியிருக்க வேண்டும் என நினைக்கிறோம்” என போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நேரலையில் தற்கொலை முயற்சி.. கைது செய்யப்படுவாரா பிரியாணி மேன்?