புனே: மகாராஷ்டிர மாநிலம் மும்பையை சேர்ந்த 25 வயது பெண்ணுக்கும், தானே பகுதியைச் சேர்ந்த கஜேந்திர தகட்கைரே என்பவருக்கு முறை தவறிய உறவு இருந்ததாக சொல்லப்படுகிறது. இதில் பெண் கருவுற்ற நிலையில், அவரை கருக்கலைப்பு செய்யக் கோரி கஜேந்திர தகட்கைரே அறிவுறுத்தி நவி மும்பை பகுதியைச் சேர்ந்த பெண் ஏஜென்ட் மூலம் ஒரு மருத்துவரிடம் அனுப்பியதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், மருத்துவர் தவறான சிகிச்சை அளித்ததாக கூறப்படும் நிலையில், சட்டவிரோத கருக்கலைப்பில் அந்த பெண் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. பெண் உயிரிழந்தது குறித்து போலீசாருக்கு முறைப்படி தெரிவிக்காமல் மருத்துவர், கஜேந்திர தகட்கைரேவிடம் சடலத்தை ஒப்படைத்ததாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து கஜேந்திர தகட்கைரே தனது நண்பர் ரவிகந்த் கெய்க்வாட்டுடன் சேர்ந்து இந்திரயனி ஆற்றில் பெண்ணின் சடலத்தை வீசியதாக சொல்லப்படுகிறது. தனது தாயின் சடலத்தை ஆற்றில் வீசுவதை கண்டு அவரது இரண்டு மற்றும் 5 வயது குழந்தைகள் கதறி அழுதுள்ளனர். இரக்கமற்ற கஜேந்திர தகட்கைரே மற்றும் ரவிகந்த் கெய்க்வாட் இரண்டு குழந்தைகளையும் ஆற்றில் வீசியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தனது மகள் காணாமல் போனது குறித்து அந்த பெண்ணின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் கஜேந்திர தகட்கைரே மற்றும் ரவிகந்த் கெய்க்வாட் ஆகியோரை கைது செய்தனர். இந்திரயனி ஆற்றில் வீசப்பட்ட பெண் மற்றும் இரண்டு குழந்தைகளின் சடலங்கள் இதுவரை கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
மூவரின் சடலங்களையும் போலீசர் தீவிரமாக தேடி வருகின்றனர். அதேநேரம், கஜேந்திர தகட்கைரே மற்றும் ரவிகந்த் கெய்க்வாட்டை ஜூலை 30 ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இருவரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். பெண்ணுக்கு சட்டவிரோத கருக்கலைப்பு செய்த மருத்துவர் மற்றும் பணம் வாங்கிக் கொண்டு மருத்துவரிடம் அப்பாய்ன்ட்மென்ட் வாங்கிக் கொடுத்த பெண் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முறை தவறிய உறவில் இருந்த பெண் உயிரிழந்த நிலையில், அவர் மற்றும் அவரது குழந்தைகளை ஆண் நண்பர் ஆற்றில் வீசி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: குஜராத்தில் கடும் வெள்ளப்பெருக்கு: அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து கோர விபத்து! - Gujarat Rain Appartment Collapse