பெங்களுரு: பெங்களூரு நகரில் உள்ள வைட் ஃபீல்டு (White Field) பகுதியில் இயங்கி வரும் ராமேஸ்வரம் கஃபே உணவு விடுதியில் இன்று பிற்பகலில் வெடிப்பு ஏற்பட்டது. இது திட்டமிட்ட குண்டு வெடிப்பு என பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டி வருகிறது. வாடிக்கையாளர் ஒருவர் விட்டுச் சென்ற பையில் இருந்த பொருள் வெடித்ததாகவும். சிலிண்டர் வெடிப்பு அல்ல எனவும், உணவு விடுதியின் உரிமையாளர் தன்னிடம் கூறியதாக பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
ராமேஸ்வரம் நகரின் பெயரை தாங்கியிருப்பதால், இந்த உணவகம் யாருடையது என்பதை நெட்டிசன்கள் பலர் இணையத்தில் தேடி வருகின்றனர். தமிழ்நாட்டின் ஆன்மிக நகரமான ராமேஸ்வரத்தின் பெயரைத் தாங்கியிருந்தாலும், இதன் உரிமையாளர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் கிடையாது. பெங்களூருவைச் சேர்ந்த தம்பதியினரான ராகவேந்திர ராவ் மற்றும் திவ்யா ராகவேந்திர ராவ் தான் இதன் உரிமையாளர்கள். ராகவேந்திர ராவ் அடிப்படையில் மெக்கானிக்கல் என்ஜினியர். திவ்யா ராகவேந்திர ராவ், சார்ட்டட் அக்கவுண்ட்டன்ட். தொழிலில் பார்ட்னராக இணைந்த இருவரும், வாழ்விலும் இணைந்து ராமேஸ்வரம் கஃபேவை நடத்தி வருகின்றனர்.
ராமேஸ்வரம் பெயர்க்காரணம்?: தம்பதிகள் இருவருமே தமிழ்நாட்டைச் சேர்ந்த ராக்கெட் விஞ்ஞானி அப்துல்கலாம் மீது பெரும் மதிப்பு வைத்திருந்தனர். அப்துல் கலாமின் சொந்த ஊர் ராமேஸ்வரம் என்பதால் 2021ம் ஆண்டு உணவகத்தை துவங்கும் போது, இந்த பெயரில் துவங்கியதாக தங்களின் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளனர். வாடிக்கையாளர்களுக்கு தென்னிந்திய பாரம்பரிய சுவையை கொடுக்க உறுதி பூண்டுள்ளதாக கூறும் இந்த தம்பதி, ராமேஸ்வரம் உணவு விடுதியின் ஒவ்வொரு வடிவமைப்பிலும் அப்துல் கலாமை நினைவு கூறும் விதத்தில் வடிவமைத்துள்ளதாக கூறுகின்றனர். அவர் வாழ்ந்த விதத்திலிருந்து உத்வேகம் பெற்று பிரமாண்டமாக தங்களின் தொழிலை கட்டமைத்துள்ளதாகவும் ராகவேந்திரா தம்பதி கூறுகின்றனர்.
இதையும் படிங்க: ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு; வெளியான சிசிடிவி காட்சிகள்..