டெல்லி: ஜிஎஸ்டி கவுன்சிலின் 53வது ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று (ஜூன்.22) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு மூலதன பொருட்கள் உள்ளிட்டவற்றின் மீதான ஜிஎஸ்டி வரிகள் மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பால் முகவர்கள் பயன் பெறும் வகையில் எகு, அலுமினியம், இரும்பு உள்ளிட்ட பால் கேன்களுக்கு ஒரே சீரான 12 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும். மேலும் அட்டை பெட்டிகள் குறிப்பாக பேப்பர் அல்லது கார்டூன் பாக்ஸ் என அழைக்கப்படும் கார்ட் போர்டுகளில் உருவாக்கப்படும் அட்டை பெட்டிகளுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதன் மூலம் இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர் பகுதிகளை சேர்ந்த ஆப்பிள் விவசாயிகள் மற்றும் விற்பனையாளர்கள் பயன் பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலைய நடைமேடை சீட்டுகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
பயணிகள் ஓய்வெடுக்கும் அறைகள், ரயில் நிலைய நடைமேடைகளில் பேட்டரி வாகனங்கள், ரயில் நிலைய சேவைகள் உள்ளிட்ட சேவைளுக்கும் ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் தங்கும் விடுதிகளுக்கும் வரிச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மாணவர்கள் தங்கிப் படிப்பதற்காக அவர்களின் வசதிக்காக கல்வி நிலையங்களைத் தவிர்த்து, வெளியில் செயல்படும் மாணவர் விடுதிகள் மற்றும் மாணவர்களுக்காக செயல்படும் உணவகங்கள், அதேபோல் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து விடுதிகளில் தங்குபவர்கள் ஆகியவற்றுக்கும் ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
அதேநேரம் சராசரியாக ஒரு மாதத்துக்கு ஒரு நபருக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கும் விடுதிகளுக்கு மட்டுமே இந்த வரி விலக்கு பொருந்தும் என்றும், மேற்கண்டவற்றில் மாணவர்கள் குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு தங்கியிருப்பதும் கட்டாயம் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.
மேலும் சிறு, குறு வரி செலுத்துவோர் பயன்பெறும் வகையில், ஜிஎஸ்டி வரி திருப்பிச் செலுத்துதல் 4ஆம் படிவத்தை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை ஏப்ரல் 30ல் இருந்து, ஜூன் 30 வரை நீட்டிக்க கவுன்சில் பரிந்துரைத்துள்ளதாகவும், 2024-25 நிதியாண்டு முதல் இந்த நடைமுறை செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
வர்த்தகத்தை எளிமையாக்குதல், இணக்கச் சுமையை தளர்த்துவது மற்றும் வரி செலுத்துவோருக்கு தேவையான வரி சலுகைகள் அறிவிப்பது தொடர்பாக பல முடிவுகளை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் இதனால் வணிகர்கள், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் வரி செலுத்துவோர் பயனடைவார்கள் என்றும் மத்திய நிதி அமைச்சர் கூறினார்.
இதையும் படிங்க: பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை: தந்தைக்கு 104 ஆண்டுகள் சிறை- கேரளா நீதிமன்றம் அதிரடி! - Kerala Father 104 year jail