துர்காபூர்: மேற்கு வங்கம் மாநிலம் அசன்சோல் பகுதிக்கு செல்ல முதலமைச்சர் மம்தா பானர்ஜி திட்டமிட்டு உள்ளார். அதற்காக துர்காபூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பயணம் மேற்கொள்ள இருந்தார். ஹெலிகாப்டரில் ஏறி இருக்கையில் அமர இருந்த மம்தா பானர்ஜி திடீரென கால் இடறி கீழே விழுந்தார்.
இதைக் கண்ட அருகில் இருந்த பாதுகாவலர்கள் அவரை உடனடியாக துக்கி விட்டனர். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து முதலுதவி சிகிச்சை செய்து கொண்ட மம்தா பானர்ஜி தொடர்ந்து அசன்சோல் பகுதிக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்றார்.
இதனிடையே ஹெலிகாப்டரில் ஏறி இருக்கையில் அமருகையில் மம்தா பானர்ஜி கால் இடறி கீழே விழுந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி வேகமாக பரவி வருகிறது. முன்னதாக கடந்த மார்ச் மாதம் மம்தா பானர்ஜியின் தலையின் நெற்றிப் பகுதியில் பலமான காயம் ஏற்பட்டது. ரத்தம் சிந்தும் நிலையில், மருத்துவமனை படுக்கையில் மம்தா பானர்ஜி இருக்கும் புகைப்படங்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வெளியிட்டனர்.
அந்த புகைப்படங்களும் வேகமாக பரவிய நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரமூகர்கள் அவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தனர். மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 42 மக்களவை தொகுதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நாடு முழுவது ஜனநாயக திருவிழா தொடங்கிய நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், பீகார், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட 12 மாநிலங்கள் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளுக்கு நேற்று (ஏப்.26) 2வது கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் பலூர்கட், ரய்கஞ்ச், டார்ஜலிங் ஆகிய தொகுதிகளில் மக்களவை தேர்தல் நடைபெற்றன.
கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் மேற்கு வங்கத்தில் உள்ள 42 இடங்களில், திரிணாமுல் காங்கிரஸ் 22 தொகுதிகளையும், பாஜக 18 இடங்களையும் கைப்பற்றின. காங்கிரஸ் இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
இதையும் படிங்க : பெங்களூருவில் வாக்குப்பதிவு கடும் சரிவு! தேர்தல் ஆணையம் கூறும் காரணம் என்ன? - Lok Sabha Election 2024