புதுச்சேரி: புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி கடந்த மார்ச் மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது உடல் அப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
சிறுமி கொலை தொடர்பாக, விசாரணை நடத்திய முத்தியால்பேட்டை காவல் நிலைய போலீசார், அதே பகுதியை சேர்ந்த விவேகானந்தன்(57), கருணாஸ்(17) ஆகிய இருவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் தடயங்கள், சாட்சி ஆவணங்கள், சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கைகள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: நேபாள சுற்றுலா பயணி தவறவிட்ட ஆப்பிள் செல்ஃபோன்.. புதுச்சேரி ஆட்டோ டிரைவர்கள் செய்த நேர்மையான சம்பவம்!
இந்நிலையில், சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த முக்கிய குற்றவாளியான விவேகானந்த, கழிவறையில் தற்கொலை செய்துகொண்டார். இதனை கண்ட சிறைக் காவலர்கள் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கான மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விவேகானந்தன் தற்கொலை சம்பவம் தொடர்பாக சிறை நிர்வாகம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக காவல்துறை மற்றும் சிறைத்துறை விரைவில் அறிக்கை வெளியிடக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சிறையில் அடைக்கப்பட்ட விவேகானந்தன் ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல் வெளியான நிலையில் அதனை சிறைத்துறை நிர்வாகம் மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்கொலை தீர்வல்ல: தற்கொலை என்பது எந்த பிரச்சனைக்கும் சரியான தீர்வு அல்ல, நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தாலோ அல்லது தற்கொலை எண்ணம் தோன்றினாலோ மாநில தற்கொலை தடுப்பு உதவி எண் 104 அல்லது சிநேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் 044-24640050 என்ற எண்களை தொடர்பு கொண்டு மனநல ஆலோசனைகளை பெறுங்கள்.