டெல்லி : இண்டிகோ விமானத்தில் வழங்கப்படும் உணவுப் பொருட்களில் உள்ள உப்பின் அளவை மேகியுடன் ஒப்பிடும் போது மிக அதிகமாக உள்ளதாக ரேவந்த் ஹிமத்சிங்க என்ற உணவு பொருள் ஆய்வாளர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பிரபல உணவுப் பொருள் ஆய்வாளர் ரேவந்த் ஹிமத்சிங்க என்பவர் பல்வேறு இடங்களுக்கு சென்று வித்தியாசமான உணவுகளை ருசித்து அந்த உணவுப் பொருட்களை மதிப்பாய்வு செய்து அதை சமூக வலைதளங்களில் வீடியோவாக பதிவிடுவதை வழக்கமாக கொண்டு உள்ளார். இந்நிலையில், இண்டிகோ விமானத்தில் வழங்கப்படும் உணவுப் பொருட்களை மதிப்பாய்வு செய்து வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
அதில் இண்டிகோ விமானத்தில் வழங்கப்படும் உப்புமா, அவல் போகா, பருப்பு சாவல் உள்ளிட்ட உணவுகளை மதிப்பாய்வு செய்தார். அதில் மேகி நூடில்ஸ் உணவில் உள்ள உப்பின் அளவை காட்டிலும் இண்டிகோ விமானத்தில் வழங்கப்படும் உப்புமா, அவல் போகா, பருப்பு சாவல் ஆகிய உணவு பொருகளில் அதிக உப்பு சேர்க்கப்பட்டு உள்ளதாக வீடியோவில் தெரிவித்து உள்ளார்.
மேலும் வீடியோவில் அதிக சோடியம் நிறைந்த மேகி நூடில்ஸை காட்டிலும், 50% உப்பு இண்டிகோ விமானத்தில் வழங்கும் உப்புமா மற்றும் அவல் போகா உள்ளிட்ட உணவுகளில் அதிகமாக உள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார். இண்டிகோவில் வழங்கப்படும் அவல் போகாவில் மேகியை விட 83 சதவீதம் உப்பு அதிகமாக உள்ளதாகவும் அதிகப்படியான உப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் போது, உயர் ரத்த அழுத்தம், இதய பிரச்சினைகள் மற்றும் சிறுநீரக பிரச்னைகள் ஏற்படலாம் என்றும் அந்த வீடியோவில் அவர் தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க : கேரளாவில் மாதிரி வாக்குப்பதிவில் பாஜகவுக்கு கூடுதல் வாக்குகள் பதிவானதா? தேர்தல் ஆணையம் திட்டவட்ட மறுப்பு! - Lok Sabha Election 2024