லக்னோ: உத்தரப் பிரதேசம் மாநிலம், ஹபூர் மாவட்டத்தில் உள்ள ஷாமஹிதின்பூர் பகுதியைச் சேர்ந்த சதேந்திர சிவால், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு, சிவால் உளவு பார்த்ததாக ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து, உத்தரப் பிரதேசம் பயங்கரவாத தடுப்புப் படையினர், மீரட்டில் சிவாலை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சிவாலிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைக்கப் பெற்ற தகவல்களை, உத்தரப் பிரதேச பயங்கரவாத தடுப்பு படை அதிகாராப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதில், ‘சிவால் பணத்திற்காக இந்திய பாதுகாப்புத்துறை, வெளியுறவுத்துறை அமைச்சகங்கள் சார்ந்த முக்கியமான தகவல்களை ஐஎஸ்ஐ அமைப்பிடம் பகிர்ந்துள்ளார்.
காண்காணிப்பு கேமராவில் கிடைக்கப் பெற்ற ஆதாரங்களை சேகரித்தப் பின்னர், பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக கூறப்படும் இந்திய தூதரக ஊழியரைக் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில், பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்” என தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சிவால் மீது லக்னோவில் உள்ள பயங்கரவாத தடுப்புப் படை காவல் நிலையத்தில், ஐபிசி பிரிவு 121 ஏ (நாட்டிற்கு எதிராக போர் தொடுத்தல்) மற்றும் அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டம், 1923 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், சிவால் கைது செய்யப்பட்டுள்ள விவகாரத்தில், அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ராமர் கோயில் குறித்து சர்ச்சை கருத்து... மணி சங்கர் அய்யர் மகள் மீது புகார்!