ஐதராபாத் : பாலஸ்தீனத்தின் காஸா மீது ஏறத்தாழ 5 மாதத்திற்கும் மேலாக இஸ்ரேல் போர் செய்து வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் போர் தொடங்கிய நிலையில், தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரமலான் மாதத்தை முன்னிட்டு காஸாவில் உடனடியாக போர் நிறுத்த நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.
அதற்கான வரைவு அறிக்கை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்டது. முந்தைய தீர்மானங்களை தன்னிடம் உள்ளிட்ட வீட்டோ அதிகாரம் கொண்டு அமெரிக்கா ரத்து செய்த நிலையில், திங்கட்கிழமை மீண்டும் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி காஸாவில் உடனடியாக இஸ்ரேல் போர் நிறுத்த நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் போர் தொடங்கியது முதல் பிணைக் கைதிகளாக பிடித்த அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள 15 உறுப்பினர்களில் அமெரிக்காவை தவிர மீதமுள்ள 14 உறுப்பினர்களும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
தீர்மானத்தில் இருந்து அமெரிக்கா ஒதுங்கியே இருந்தது. இதனால் இஸ்ரேல் மீது அமெரிக்கா கடும் அதிருப்தியில் இருப்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை கொண்டு ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னரும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இஸ்ரேலுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அமெரிக்கா ரத்து செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. காஸா மீதான இஸ்ரேலின் போர் தொடங்கி ஏறத்தாழ 5 மாதங்கள் நிறைவு பெற்ற நிலையில், முதல் முறையாக ஐநாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி போர் தொடங்கிய நிலையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஏறத்தாழ 32 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் பலர் தங்களது சொந்த நாட்டை விட்டு அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து உள்ளனர். இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் காஸா பகுதியில் பஞ்சத்தை விட மிக கொடூரமாக சூழல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : ராஜஸ்தானில் ஹோலி கோலாகலம்! வர்ணங்களுக்கு பதில் கற்களை வீசி மக்கள் கொண்டாட்டம்! - Rajasthan Stone Pelting Holi