திருச்சூர்: கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை 3 ஏடிஎம் மையங்களில் அடையாளம் தெரியாத கும்பல் சுமார் ரூ.70 லட்சத்தை கொள்ளையடித்து சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.
ஏடிஎம் மைய கட்டுப்பாட்டு அறை மூலம் இந்த கொள்ளை சம்பவம் போலீசாரின் கவனத்துக்கு வந்தது. கொள்ளை கும்பல், பாரத ஸ்டேட் வங்கியின் மாப்ராணம், திருச்சூர் கிழக்கு மற்றும் கோலாசி ஏடிஎம் மையங்களில் கொள்ளை சம்பவம் நடைபெற்றதாக போலீசார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக திருச்சூர் நகர காவல் ஆணையர் ஆர் இளங்கோ செய்தியாளர்களிடம் கூறுகையில், "கொள்ளை சம்பவம் அதிகாலை 2 மணியிலிருந்து அதிகாலை 4 மணிக்குள் நடந்துள்ளது. ஒரு சம்பவம் ஊரக காவல் எல்லையிலும், மற்ற இரண்டும் நகர காவல் எல்லையிலும் நடந்துள்ளன. கொள்ளையர்கள் சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தி, கேஸ் கட்டரைப் பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரத்தை வெட்டியுள்ளனர்" என்றார்.
இதையும் படிங்க: கேரள கொள்ளை முதல் என்கவுட்டர் வரை நடந்தது இதுதான்! சினிமாவை மிஞ்சும் சம்பவங்கள்
இந்த கும்பல் தொடர்பாக சில தகவல்களை சேகரித்துள்ள போலீசார், அண்டை மாநிலமான தமிழகத்திலும் விசாரணையை தொடங்கியுள்ளனர். முதலில் மாப்ராணத்தில் உள்ள ஏடிஎம் மையத்துக்கு வந்த கொள்ளை கும்பல் அங்கு சுமார் ரூ.35 லட்சத்தை கொள்ளையடித்து சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.
அதன் பின்னர் நகருக்குச் சென்று ஷொரனூர் சாலையில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் ரூ.9.5 லட்சமும், அதைத் தொடர்ந்து கோலாசியில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் ரூ.25 லட்சத்தையும் கொள்ளையடித்துச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்