டெல்லி: நாட்டில் அடக்குமுறை ஆட்சி நீண்ட நாட்களுக்கு எடுபடாது என்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை நீண்ட நாட்கள் சிறையில் வைத்திருக்க முடியாது என்றும் சுனிதா கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளின் பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் மற்றும் ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பேரணியில் பேசிய சுனிதா கெஜ்ரிவால், முதலமைச்சர் பொறுப்பை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக எதிர்பார்ப்பதாக கூறினார்.
அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய வேண்டுமா? என கூட்டத்தினரை பார்த்து கேள்வி எழுப்பிய சுனிதா, அரவிந்த் கெஜ்ரிவால் சிங்கம் என்றும் அவரை நீண்ட நாட்கள் சிறையில் வைத்திருக்க முடியாது என்றும் கூறினார். நாட்டில் அடக்குமுறை ஆட்சி நீண்ட நாட்கள் பலிக்காது என்றும் தனது கணவருக்கு ஆயிரக்கணக்கான மக்களின் ஆசிர்வாதம் துணை இருப்பதாக தெரிவித்தார்.
இந்தியா கூட்டணிக்கு மக்கள் வாய்ப்பு வழங்கினால், சிறந்த தேசத்தை நாங்கள் கட்டியெழுப்புவோம் என்றும் நாட்டு மக்களுக்கு தடையில்லா மின்சாரம் கிடைக்காத போதோ, போதிய மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் ஒருவர் இறக்கும் தருவாயை கண்டு பாரதத் தாய் வேதனை கொள்வதாக சுனிதா கெஜ்ரிவால் தெரிவித்தார்.
கடந்த 75 ஆண்டுகளாக டெல்லி மக்கள் அநீதியை எதிர்கொண்டு வருவதாகவும் அரசு ஊனமுற்று காணப்படுவதாகவும் கூறிய சுனிதா கெஜ்ரிவால் இந்தியா கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்றால் முழுமையான மாநிலமாக டெல்லி மாறும் என்றும் தெரிவித்தார். மேலும் தடையில்லா மின்சாரம், ஏழைகளுக்கு இலவச மின்சாரம், அரசுப் பள்ளிகள், முஹல்லா கிளினிக்குகள், பல்நோக்கு மருத்துவமனைகள், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று சுனிதா கெஜ்ரிவால் தெரிவித்தார்.
டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற இந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ஆர்ஜெடி தலைவர் தேஜஸ்வி யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவ சேனா உத்தவ் அணியின் தலைவர் உத்தவ் தாக்ரே, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், சிபிஐ.எம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிபிஐ பொதுச் செயலாளர் டி ராஜா, பிடிபி தலைவர் மெஹபூபா முப்தி, தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, ஜார்கண்ட முதலமைச்சர் சம்பை சோரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க : "ஜனநாயகத்தை காக்க பேரணி"- டெல்லியில் திரண்ட இந்தியா கூட்டணி தலைவர்கள்! - INDIA Bloc Protest