திருப்பதி: திருமலை திருப்பதி கோயில் பிரசாதமான லட்டின் புனிதத்தன்மையை மீட்டெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திருப்பதி திருமலை தேவஸ்தான செயல் அலுவலர் சியாமளா ராவ் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியின்போது, திருப்பதி லட்டு தயாரிப்பில் விலங்கு கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டதாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் லட்டு தயாரிப்புக்கு பயன்படுத்தப்பட்ட மூலப்பொருள்களை ஆய்வுக்கு அனுப்பியதில் மேற்கண்ட குற்றச்சாட்டை உறுதி செய்யும் விதமான முடிவுகள் வரப்பெற்றதாகவும், இதுதொடர்பான அறிக்கையை தெலுங்கு தேசம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அன்னம் வெங்கட ரமணா ரெட்டி நேற்று வெளியிட்டார். இதைத் தொடர்ந்து திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டது குறித்த சர்ச்சை தேசிய அளவில் பூதாகரமாக மாறியது.
இதற்கிடையே திருப்பதி லட்டு தயாரிப்பில் அசுத்தமான பொருட்கள் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில் ஆந்திர மாநில அரசு தீவிரம் காட்டி வருவதாகவும், மிகவும் புனிதமான திருமலையில் நடந்த இந்த அசம்பாவிதம் குறித்து உலகம் முழுவதும் உள்ள பக்தர்களின் கவலைகளை அரசு கவனத்தில் கொண்டுள்ளதாகவும் ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது.
ஆலோசனை: ஆந்திர அரசின் தலைமைச் செயலாளர் நிரப் குமார் பிரசாத், அமைச்சர்கள் அனம் ரமணராய ரெட்டி, நிம்மலா ராமாநாயுடு, அனானி சத்யபிரசாத், கொல்லு ரவீந்திரா, கொலுசு பார்த்த சாரதி மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் திருப்பதி லட்டு விவகாரம் குறித்து தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினர்.
#WATCH | Tirupati Laddu Prasadam row | Executive officer of Tirumala Tirupathi Devastanam (TTD) Shamala Rao says, " the report says the ghee sample is adulterated with vegetable fat and also animal fat. animal fat adulteration includes lard (pig fat), palm oil, beef tallow, and… pic.twitter.com/LPdyuCCvA3
— ANI (@ANI) September 20, 2024
அதே நேரத்தில் திருமலை லட்டு பிரசாதத்தில் கலப்பட நெய் பயன்பாடு தொடர்பாக எழுந்த சர்ச்சை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தொடர்பு கொண்டு உரிய விவரங்களை கேட்டறிந்தார். அப்போது, இதுதொடர்பாக அறிக்கை அளிக்குமாறு ஜே.பி.நட்டா கேட்டுக் கொண்டார்.
இச்சூழலில் திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக இன்று மதியம் திருமலையில் செய்தியாளர்களை சந்தித்த தேவஸ்தான செயல் அலுவலர் சியாமளா ராவ் கூறியதாவது:
"நெய் மாதிரியில் காய்கறி கொழுப்பு மற்றும் விலங்கு கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை கூறுகிறது. விலங்கு கொழுப்பு கலப்படத்தில் பன்றிக்கொழுப்பு, பாமாயில், மாட்டிறைச்சி கொழுப்பு மற்றும் திராட்சை விதை, ஆளிவிதை, மீன் எண்ணெய் ஆகியவை அடங்கும்.
நெய் மாதிரி இதெல்லாம் ஒரு கலவையாக இருந்தது. ஆய்வு முடிவின் விளைவு அசாதாரணமாக குறைவாக இருந்தது. தூய பால் கொழுப்பின் அளவு 95.68 முதல் 104.32 வரை இருக்க வேண்டும். ஆனால் எங்கள் நெய் மாதிரிகள் அனைத்தும் சுமார் 20 மதிப்புகளை மட்டுமே கொண்டிருந்தது. இது, அந்த நெய் அதீத கலப்படம் கொண்டதன் அடையாளமாகும்.
புகாருக்குள்ளான நிறுவனங்களை கருப்புப் பட்டியலில் வைப்பதற்கான நடைமுறையை நாங்கள் தொடங்கி உள்ளோம். மேலும் அவற்றை விநியோகித்தவர்களுக்கு அபராதம் விதிக்க உள்ளோம். நெய் விநியோகத்தை மேம்படுத்தவும், எங்கள் உள் அமைப்பை வலுப்படுத்தவும் நாங்கள் ஒரு நிபுணர் குழுவை அமைத்துள்ளோம். இதன்மூலம் இதுபோன்ற சிக்கல்கள் இனி ஏற்படாது.
பரிசோதனைகளில் தேர்ச்சி பெற்ற விநியோகஸ்தர்களை கண்டறிந்துள்ளோம். தேவஸ்தானத்துக்கு சொந்தமாக ஆய்வகம் அமைக்க நிபுணர் குழுவை கேட்டுக் கொண்டுள்ளோம். எனவே எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாது. திருப்பதி கோயில் பிரசாதத்தின் புனிதம் மீட்டெடுக்கப்படும்." என சியாமளா ராவ் தெரிவித்தார்.