புதுடெல்லி: ஈஷா வழக்கில் தமிழ்நாடு காவல்துறை உச்சநீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், "ஈஷா மையத்திற்குச் சென்ற பலர் காணவில்லை, காவல்துறையால் அவர்களைக் கண்டுபிடிக்கவும் முடியவில்லை. ஈஷா மைய வளாகத்தில் தகன மேடை ஒன்று செயல்படுகிறது" எனவும் தமிழ்நாடு போலீசார் தங்கள் மனுவில் கூறியுள்ளனர்.
கோவையைச் சேர்ந்த பேராசிரியர் காமராஜ் என்பவர், ஈஷா மையம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், தனது இரண்டு மகள்கள் கோவை ஈஷா யோகா மையத்துக்கு யோகா கற்க சென்ற நிலையில் அங்கேயே தங்கிவிட்டனர். மேலும், தனது இருமகள்களையும் ஆசிரமத்தினர் மூளைச் சலவை செய்து, துறவறம் ஏற்கச் செய்துள்ளதாகவும், தனது இருமகள்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பெற்றோருடன் செல்ல அனுமதிக்க வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.
அதையடுத்து இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகள் குறித்த விவரங்களையும் சேகரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக காவல் துறை, சமூக நலத்துறைகளுக்கு உத்தரவிட்டது. அதனடிப்படையில், அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். ஆனால், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, ஈஷா யோகா மையம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு அக்.3ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, ஈஷா யோகா மையத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடை விதித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டு, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் தமிழக காவல்துறை மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனவும், உயர்நீதிமன்ற உத்தரவின்படி, காவல்துறை விசாரணை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்" எனவும் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், ஈஷா வழக்கில் தமிழ்நாடு காவல்துறை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், "ஈஷா மையத்திற்குச் சென்ற பலர் காணவில்லை, காவல்துறையால் அவர்களைக் கண்டுபிடிக்கவும் முடியவில்லை. மேலும், ஈஷா மைய வளாகத்தில் தகன மேடை ஒன்று செயல்படுகிறது. அதுமட்டுமின்றி ஈஷா மையத்தில் உள்ள மருத்துவமனையில் காலாவதியான மருந்து மாத்திரைகளை வழங்கப்படுவது தெரியவந்துள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்