திருப்பதி: சனாதன தர்மம் குறித்து பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.
ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி லட்டு தயாரிப்பதற்காக உபயோகிப்பட்ட நெய்யில் கலப்படம் செய்யப்பட்டதற்கு 11 நாள் விரதத்தை நிறைவு செய்த ஆந்திர மாநில துணை முதல்வர் பவன்கல்யாண் நேற்று இரவு திருப்பதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "திருமலை ஏழுமலையான் கோயில் பிரசாதம் தயாரிப்பதில் தவறு நடந்தது. நான்விரதம் இருந்தேன். ஆனால்இதனை கூட அசிங்கமாக சித்தரிக்கின்றனர்.
நான் ஒரு சனாதன இந்து என்று பெருமையாக கூறிக்கொள்கின்றேன். சனாதன தர்மம் மீது எனக்கு அதிக அக்கறை உண்டு. இங்கு தமிழர்கள் அதிகம் பேர் இருப்பதால் தமிழிலேயே பேச விரும்புகின்றேன். தமிழத்தை சேர்ந்த இளம் அரசியல்வாதி ஒருவர் சனாதன தர்மம் ஒரு வைரஸ் என்றும் அதனை கூண்டோடு அழித்திட வேண்டும் என்றும் பேசியிருக்கிறார். இப்படி அவர் மாற்று மத த்தை சேர்ந்தவர்களைப் பற்றி பேச முடியுமா.
இதையும் படிங்க : சனாதன வழக்கு; உதயநிதி ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
இந்துகள் ஒற்றுமையாக இல்லாததே இதற்கு அடிப்படை காரணம். அதனால்தான் பலர் நம் மீது ஏறி சவாரி செய்கிறார்கள்.வேற்று மதத்தை குறித்து மாற்றுக்கருத்துகளை முன் வைத்தால் பலர் அதற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். சினிமா துறை, அரசியல் துறையை சேர்ந்த பலரே இவ்வாறு பேசுகின்றனர். ஆனால், இந்துகளை தவறாகப் பேசினால், யாரும் வாய் திறப்பதில்லை.
நாடு முழுவதும் சனாதன தர்மத்தை பாதுகாப்பதற்கான சட்டம் தேவைப்படுகிறது. நம் சனாதன தர்மத்தை நாம்தாம் காப்பாற்ற வேண்டும். சனாதனத்தை இழிவு படுத்தினாலோ, அவமானப்படுத்தினாலோ உயிரை கொடுத்தாவது சனாதன தர்மத்தை காப்பாற்றுவேன்," என்று கூறினார்.