பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஹசன் தொகுதி மதச்சார்பற்ற ஜனதா தள எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா பல்வேறு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவர் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்து சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே அவர் வெளிநாடு தப்பிச் சென்று தலைமறைவான நிலையில், அவரை மீண்டும் இந்தியா அழைத்து வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிறப்பு புலனாய்வு குழுவின் கோரிக்கையை ஏற்று சிபிஐ பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ் வழங்கி உள்ளது.
இன்டர்போல் அமைப்பின் மூலம் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்டர்போல் அமைப்பில் உள்ள நாடுகள் பிரஜ்வல் ரேவண்ணா குறித்த தகவல்களை உடனக்குடன் அப்டேட் செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
பிரஜ்வல் ரேவண்ணாவின் பண்ணை வீட்டில் பணிபுரிந்த பெண் இந்த பாலியல் புகாரை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்ணை வீட்டில் பணியாற்றிய போது பிரஜ்வல் ரேவண்ணாவால் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த பெண் குறித்த எந்த தகவல்களையும் போலீசார் வெளியிடவில்லை.
ஏற்கனவே பிரஜ்வல் ரேவண்ணா மீது இரண்டு பாலியல் புகார்கள் உள்ள நிலையில், தற்போதைய புகார் சேர்த்தும் அவர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தனது வீட்டில் சமையலர் வேலை செய்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா மீது முதல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் அந்த பெண்ணை கடத்திய குற்றச்சாட்டுக்காக ஹோலநரசிபுரா தொகுதி எம்.எல்.ஏவும் பிரஜ்வல் ரேவண்ணாவின் தந்தையுமான எச்.டி ரேவண்ணா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து மதச்சார்பற்ற ஜனதா தள பெண் உறுப்பினரை துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் அளித்த புகாரில் பிரஜ்வல் ரேவண்ணா மீது 2வது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிஎஸ்4 என்ஜின் சோதனை வெற்றி: இஸ்ரோ புது மைல்கல்! - ISRO PS4 Engine Test Success