கன்னூர் : வடகேரள பகுதிகளில் உள்ள கோயில் திருவிழாக்களில் தெய்யம் ஆட்டம் புகழ்பெற்றது. மிகப் பழமையான இந்த பாரம்பரிய ஆட்டத்தை ஆடும் கலைஞர்கள் தெய்வத்திற்கு ஒப்பாக கருதப்படுவர் எனக் கூறப்படுகிறது. உடல் முழுவதும் வர்ணங்களை பூசிக் கொண்டும் தென்னை மற்றும் மூங்கில் கீற்றுகளை இடுப்புப் பகுதியில் கட்டிக் கொண்டும் கலைஞர்கள் தெய்யம் ஆட்டம் ஆடுவர்.
இந்நிலையில், கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற பெருஞ்ஞானம் உதயகுன்னு மாதப்பூரா கோயில் உள்ளது. இந்த கோயில் திருவிழாவில் பாரம்பரிய தெய்யம் நடனம் ஆட கலைஞர் ஒருவர் ஒப்பணை செய்து வீதியில் சென்று உள்ளார். அப்போது தெய்யம் கலைஞரை பார்த்து சிறுமி ஒருவர் பதறியதாக கூறப்படுகிறது.
மேலும், தெய்யம் கலைஞரை பார்த்து பதறி ஓடிய சிறுமி, நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதைக் கண்டு ஆத்திரமடைந்த கிராம மக்கள் தெய்யம் கலைஞரை கடுமையாக தாக்கி உள்ளனர். மேலும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு தெய்யம் ஆடும் கலைஞரை தாக்க முயற்சிப்பதும், கும்பலாக திரண்டு தாக்குவதுமான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த கோயில் திருவிழா கமிட்டியினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தாக்குதலுக்கு ஆளான தெய்யம் கலைஞரை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : கேரளா தற்கொலை படை தாக்குதல் சதித் திட்டம்: ரியாஸ் அபூபக்கர் குற்றவாளி - சிறப்பு நீதிமன்றம்!