ருத்ரபிரயாக்: உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலை பகுதியில் சென்று கொண்டு இருந்த டெம்போ டிராவலர் பயணிகள் வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் இறங்கி அலக்நந்தா ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் டெம்போ டிராவலர் வாகனம் உருக்குலைந்தது.
அதில் பயணித்த 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தை கண்ட அருகில் இருந்த கிராம மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் படுகாயம் அடைந்த 7 பேர் மீட்கப்பட்ட நிலையில், அருகில் இருந்த சிகிச்சை மையத்தில் முதற்கட்ட மருத்துவ உதவி வழங்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
தொடர்ந்து விபத்தில் உயிரிழந்த 10 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து ஆற்றில் விழுந்த டெம்போ டிராவலரை மீட்கும் பணியில் மீட்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
விபத்து எப்படி நடந்தது என்பதற்காக எந்த தகவலும் இல்லாத நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். இதனிடையே விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில் "உள்ளூர் நிர்வாகம் மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுக்கள் நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சத்தீஸ்கரில் 8 நக்சல்கள் சுட்டுக் கொலை! பாதுகாப்பு வீரர் வீரமரணம்! - Chattisgarh Naxal encounter