டெல்லி: மத்திய டெல்லி ஜெய் சிங் சாலையில் உள்ள காவல் தலைமையகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. மத்திய டெல்லியில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நங்லோய் பகுதியில் வெடிகுண்டு புதைத்து வைக்கப்பட்டு உள்ளதாக அந்த மிரட்டல் மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். தீவிர சோதனைக்கு பின்னர் வெடிகுண்டு மிரட்டல் போலி என கண்டறிந்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து, மிரட்டல் விடுக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியின் ஐபி அட்ரசை கொண்டு விசாரணை நடத்திய போலீசார் மிரட்டல் விடுத்தது சிறுவன் என கண்டறிந்தனர்.
இதையடுத்து சிறுவனை பிடித்து விசாரித்த போலீசார் மீண்டும் இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என எச்சரித்தனர். மேலும், சிறுவனுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கிய போலீசார் தொடர்ந்து அவனது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். சிறுவன் அடையாளங்களை வெளிப்படுத்தக் கூடிய எந்த தகவலையும் போலீசார் வெளியிடவில்லை.
இதுகுறித்து போலீசார் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், மிரட்டல் விடுக்கப்பட்ட மின்னஞ்சல் சிறுவனால் அனுப்பப்பட்டது என்று கண்டறியப்பட்டதாகவும் சிறுவனின் நலனை கருத்தில் கொண்டும், சிறார் நீதி மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் அவசியத்தை உணர்ந்து அவரது அடையாளங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறும்புத்தனமான செயல்களால் சிக்கிக் கொண்ட சிறுவனுக்கு போதிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ராகுல் காந்திக்கு போட்டியாக உ.பி. அமைச்சரை களமிறக்கும் பாஜக! யார் இந்த தினேஷ் பிரதாப் சிங்? - Rae Bareli BJP Candidate