ஆந்திரா: 18வது நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்றது. இதனுடன் அருணாச்சலப்பிரதேசம், ஒடிசா, சிக்கிம் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றது.
இதில் சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேச மாநிலங்களுக்கு கடந்த நேற்றைய முன்தினம் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதேபோல், நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல், ஒடிசா மற்றும் ஆந்திரா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது.
மும்முனை போட்டி? இந்த தேர்தலில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி, பாஜக, ஜனசேனா கூட்டணி மற்றும் காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகள் போட்டியிட்டன. மூன்று கட்சிகளும் ஆந்திராவில் பலம் பொருந்திய கட்சிகள் என்பதால் கடுமையான போட்டி நிலவும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகின.
ஆனால், காலை முதல் அறிவிக்கப்பட்டு வரும் தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது அதற்கு துளியும் வாய்ப்பு இல்லை என்பது போல்தான் இருந்தது. காரணம், ஆந்திராவில் உள்ள பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் பாஜக - தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி கட்சி வேட்பாளர்கள் காலை முதலே பல்வேறு இடங்களில் முன்னணி வகித்து வந்தது.
தற்போதைய நிலவரப்படி தெலுங்கு தேசம் 73 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது, மேலும் 62 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பவன் கல்யாண், தலைமையிலான ஜனசேனா கட்சி 13 இடங்களில் வெற்றி பெற்றதுடன் 8 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
அதே போல் பாஜக ஐந்து இடங்களில் வெற்றியும், மூன்று இடங்களில் முன்னிலையும் வகிக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. தற்போதுவரை அந்த கட்சி 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, 8 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட முன்னிலை வகிக்கவில்லை. காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே இதுபோன்ற நிலவரம் தொடர்ந்ததால், ஆந்திர முதலமைச்சராக 4ஆவது முறையாக சந்திரபாபு நாயுடு பதவியேற்பது உறுதியானது. இதையடுத்து, அவர் பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சந்திரபாபு நாயுடு வரும் ஜூன் 9ஆம் தேதி அமராவதியில் பதவியேற்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து சந்திரபாபு நாயுடுவை தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்ததற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2004 தேர்தலின் போது திமுக எவ்வாறு கூட்டணி அமைத்து மத்தியில் அமைச்சர் பதவியைப் பெற்றதோ, அந்த வாய்ப்பு தற்போது சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு கிடைத்துள்ளது. அதேநேரம், 2021ஆம் ஆண்டு ஆந்திர சட்டப்பேரவையில் ஒய்எஸ்ஆர் உறுப்பினர்கள் சந்திரபாபு நாயுடுவை அவமதிக்கும்படி நடந்து கொண்ட நிலையில், வெளியில் வந்து செய்தியாளர்களைச் சந்தித்த சந்திரபாபு, அடுத்ததாக சட்டப்பேரவைக்கு வந்தால் முதலமைச்சராக மட்டுமே வருவேன் என சூளுரைத்தார்.
இதையும் படிங்க: நிதிஷ் குமாருக்கு துணை பிரதமர் பதவி? இந்தியா கூட்டணியின் திட்டம் என்ன?