அயோத்தி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில், கடந்த ஜனவரி 22ஆம் தேதி பிரதமர் மோடி ராமர் கோயிலைத் திறந்து வைத்தார். இந்த நிலையில், ராம நவமியான இன்று (ஏப்.17) கோயிலின் முதல் ராம நவமி விழா கொண்டாடப்பட்டது.
அந்த வகையில், இன்று (ஏப்.17) மதியம் 12.16 மணிக்கு, அயோத்தி கோயிலில் உள்ள ராமர் சிலையின் நெற்றியில் திலகம் போல சூரியக் கதிர்கள் விழுந்தன. சுமார் இரண்டு முதல் இரண்டரை நிமிடங்கள் வரையில் இந்த நிகழ்வை பக்தர்கள் காண, அயோத்தியில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டு, அதில் திரையிடப்பட்டன.
காலை ஆரத்தி: அயோத்தியில் உள்ள ராம ஜென்ம பூமி கோயிலில் ராம் லல்லாவின் "திவ்ய அபிஷேகம்" காலையில் ஆன்மீக முறைப்படி மிகுந்த உற்சாகத்துடன் நடத்தப்பட்டதாக, அயோத்தியில் உள்ள ராமர் கோயில் நிர்வாகத்தின் பொறுப்பு அமைப்பான ஸ்ரீ ராம் ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
ராம் லல்லா சூர்ய திலகம்: அயோத்தி ராமர் சிலையின் நெற்றியில் விழும் இந்த சூர்ய திலகம், கண்ணாடிகள் மற்றும் லென்ஸ்களின் உதவியுடன் ஒரு விரிவான பொறியியல் முறையால் சாத்தியப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த அமைப்பு, நேற்றைய தினமே (ஏப்.16) ஒரு பொறியாளர்கள் குழுவால் சோதிக்கப்பட்டது என்று CSIR-CBRI ரூர்க்கியின் விஞ்ஞானி டாக்டர்.எஸ்.கே.பணிகிரஹி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி: ராம நவமியை முன்னிட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்குப் பிறகு அயோத்தியில் முதன்முறையாக திருவிழா கொண்டாடப்படுவதால், அயோத்தி ஒப்பிட முடியாத ஆனந்தத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இதுமட்டுமல்லாது, தனது 'X' வலைத்தளப் பக்கத்தில், "ராம் லல்லா பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு இது முதல் ராம நவமி, இதில் பகவான் ஸ்ரீ ராமரின் சூரிய திலகத்தின் தெய்வீக நிகழ்வும் வந்துள்ளது. உலகெங்கிலும் உள்ள ராம பக்தர்கள் இந்த அற்புதமான தருணத்தை கண்டிப்பாக காண வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
ராம நவமி சடங்குகள்: அயோத்தியில் உள்ள ராம் மந்திரில், பிரம்ம முகூர்த்தத்தில் அதிகாலை 3.30 மணி முதல் பக்தர்களுக்கான தரிசனம் திறக்கப்பட்டது. காலை 5 மணிக்கு ராம் லல்லாவின் சிருங்கார் ஆரத்தி நடந்தது. அதனைத் தொடர்ந்து, ராமருக்கு அன்னதானம் செய்யும் நேரத்தில், சிறிது நேரம் திரை போடப்பட்டது. மேலும், இன்று (ஏப்.17) இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு வரிசையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, வழக்கமான முறையில் போக் மற்றும் ஷயன் ஆரத்தி நடைபெறும் என்றும், இந்த போக் ஆரத்தியில் ராம் லாலாவுக்கு 56 வகையான போக் பிரசாதம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சிஏஏ, என்ஆர்சி சட்டங்கள் ரத்து.. ஆண்டுக்கு 10 சிலிண்டர் இலவசம் - திரிணாமுல் காங். தேர்தல் அறிக்கையில் என்னென்ன அறிவிப்புகள்?