மும்பை: கொல்கத்தாவில் 31 வயது பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்துக்கு, மருத்துவமனையில் போதுமான பாதுகாப்பு வசதிகள் இல்லாததே காரணம் எனக்கூறி மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.
இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு இந்த வழக்கை வரம் ஆகஸ்ட் 20ஆம் தேதி விசாரிக்க உள்ளது.
இந்த நிலையில், மும்பையில் குடிபோதையில் இருந்த நோயாளி பெண் மருத்துவரை அடித்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள சியோன் மருத்துவமனைக்கு இன்று அதிகாலை தலையில் பலத்த காயத்துடன் ஒருவர் சிகிச்சைக்காக வந்துள்ளார். அப்போது, அவருடன் ஏழு பேர் கொண்ட உறவினர்களும் இருந்தனர். சிகிச்சை பெற வந்தவர் ஏற்கனவே குடி போதையில் இருந்துள்ளார்.
இந்த நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தலையில் தையல்கள் போடப்பட்டுள்ளன. இருப்பினும், அந்த நபர் பெண் மருத்துவரிடம் மேற்கொண்டு சிகிச்சை அளிக்குமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, தலையில் கட்டப்பட்டிருந்த காட்டன்களை எடுத்து மருத்துவர் மீது வீசியுள்ளார்.
மேலும், அந்த பெண் மருத்துவர் மீது கை வைத்து தாக்கியும் உள்ளார். இதில் மருத்துவரின் கைகளில் சிராய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. சுதாரித்துக்கொண்ட மருத்துவர் சத்தம் போட்டு பாதுகாவலர்களை வரவழைத்துள்ளார். ஆனால், அதற்குள் அந்த நபரும் அவரது உறவினர்களும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
அதன் பின்னர் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர், சியோன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த மருத்துவமனையில் இதுபோன்று பல சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதாக மருத்துவமனை வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு, அதிகாலை இரண்டு மணி அளவில் மருத்துவரை சில நோயாளிகள் துரத்திச் சென்றுள்ளனர். எனவே, இப்பகுதியில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துகொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இதையும் படிங்க: பேருந்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை! தொடரும் பாலியல் சம்பவங்கள்! பெண் பாதுகாப்புக்கு கேள்வி?