டெல்லி: சென்னையில் கடந்த ஆண்டு சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது, டெங்கு, மலேரியா, கரோனாவை ஒழித்தது போல சனாதன தர்மத்தையும் ஒழிக்க வேண்டும் என பேசினார்.
இதனை அடுத்து, பிரதமர் மோடி உள்பட மத்திய அமைச்சர்களும், பாஜக நிர்வாகிகளும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர். உதயநிதி ஸ்டாலினின் சனாதன தர்மம் குறித்த பேச்சு மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனிடையே, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த பேச்சுக்கு எதிராக கர்நாடகா, பீகார், மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த நிலையில், இந்த வழக்குகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று (ஆக.14) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "அனைத்து வழக்குகளையும் ஒருங்கிணைத்து சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது" என்று மறுப்பு தெரிவித்தனர்.
இதுமட்டுமல்லாது, இந்த வழக்குகளை தமிழ்நாடு தவிர்த்து பிற மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றம் ஏதேனும் ஒன்றிற்கு மாற்ற முடியும் என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், பிற மாநிலங்களில் நடைபெறும் வழக்குகளில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக விலக்கு அளித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனைத் தவிர்த்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த மனுதாரர்கள் அனைவரும் நவம்பர் 18ஆம் தேதிக்கு முன்னதாக பதில் மனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி நாகேந்திரனுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்!