டெல்லி: கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற நடவடிக்கைகளின்போது, பெண் வழக்கறிஞருக்கு எதிராக நீதிபதி ஒருவர் தெரிவித்த சர்ச்சைக்குரிய மற்றும் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் இன்று தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்று நீதிமன்ற நடவடிக்கைகளின்போது நீதிபதி வேதவியாசர் ஸ்ரீஷானந்தா, ஒரு பெண் வழக்கறிஞரைக் கண்டித்தார். அப்போது சில ஆட்சேபகரமான கருத்துகளை நீதிபதி தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகின.
இந்நிலையில், மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், எக்ஸ் வலைத்தளம் வாயிலாக இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு சென்று, இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில், இன்று காலை உச்ச நீதிமன்றம் கூடியதும், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் மூத்த நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய், சூர்யகாந்த் மற்றும் ஹிருஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
விசாரணையின்போது, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறுகையில், "நீதிமன்ற நடவடிக்கைகளின்போது கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி கூறிய கருத்து ஊடகங்களில் கவனம் பெற்றுள்ளது. இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் அறிவுறுத்தலைப் பெற்று அறிக்கை சமர்ப்பிக்குமாறு கர்நாடக உயர் நீதிமன்றத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்." என்றார்.
மேலும், "நாம் சில அடிப்படை வழிகாட்டுதல்களை வகுக்கலாம்" எனவும் நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது. தொடர்ந்து, "இது தொடர்பான அறிக்கையை இரண்டு நாள்களுக்குள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். வரும் புதன்கிழமை இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்" என தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தார்.