புதுடெல்லி: டெல்லியில் கடந்த ஜூலை மாதம் பெய்த தொடர் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அந்த சூழலில் ஜூலை 27ம் தேதி, பேராஜேந்திர நகர் பகுதியில் உள்ள ராவ் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மைய கட்டடத்தின் அடித்தளம் வெள்ள நீரில் மூழ்கியதால் ஒரு ஆண், இரு பெண்கள் என மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பான வழுக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த நிலையில், இதுபோன்ற பயிற்சி மையங்களில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சீரான தரநிலைகளை அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. மேலும், அதற்கான தர நிலைகள் அனைத்து பயிற்சி மையங்களிலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
டெல்லி மாணவர்கள் மரணம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் உஜ்ஜல் புயான் அடங்கிய அமர்வு விசாரித்தது.
இதையும் படிங்க: அரசியல் சட்டத்தின் முகவுரையில் திருத்தம் கோரிய மனுக்கள்...உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற பரபரப்பு வாதங்கள்!'
அப்போது, பயிற்சி மையங்களில் இருக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்களை பரிந்துரைத்த மூத்த வழக்கறிஞர் சித்தார்த் தேவ், பயிற்சி மையங்களில் தீ பாதுகாப்பு, கட்டண கட்டுப்பாடு, மாணவர் வகுப்பறை பகுதி விகிதம், மாணவர் ஆசிரியர் விகிதம், சிசிடிவிக்களை நிறுவுதல், மருத்துவ வசதிகள், மனநலப் பாதுகாப்பு மற்றும் பயிற்சி மையங்களில் படிப்பவர்களுக்கு ஆலோசனை வழங்குதல் ஆகிய வசதிகளை குறிப்பிட்டார். மேலும், இந்த விவகாரத்தில் அனைத்து மாநிலங்களும் ஒரு குழுவாக இணைக்கப்பட வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.
அதற்கு நீதிபதிகள், பயிற்சி மையங்களில் ஒரே மாதிரியான தரநிலைகள் இருக்க வேண்டும் என்று தெரிவித்ததோடு, பயிற்சி நிறுவனங்களுக்கான விரிவான கொள்கை மற்றும் தன்மை குறித்த ஆலோசனைகளை மூத்த வழக்கறிஞர் சித்தார்த் தேவிடம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு வலியுறுத்தினர். தொடர்ந்து இந்த விசாரணையை இரண்டு வாரத்துக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் இதே வழக்கின் விசாரணையின் போது உச்ச நீதிமன்றம் காட்டமான கருத்துக்களை கூறி இருந்தது. அப்போது, இதுபோன்ற சம்பவங்கள் வேறு எங்கும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய, இந்திய அளவில் இப்பிரச்சினையை ஆராய வேண்டும் என்றும் பயிற்சி மையங்கள் மரண அறைகளாக மாறி மாணவர்களின் உயிரோடு விளையாடுவதாகவும் கூறியது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்