டெல்லி: கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ஆம் தேதி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்தார். இந்துகளின் பண்டிகையான தீபாவளியை ஒழிக்க வெளிநாட்டு நிதி உதவி பெறும் கிறஸ்தவ மிஷனரிகள் திட்டமிட்டு உள்ளதாகவும், அதன் காரணமாக தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதை தடை செய்ய கிறிஸ்தவ மிஷனரிகள் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதைக் கண்டித்து வி.பியூஷ் என்பவர் அண்ணாமலைக்கு எதிராக நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்நிலையில், இந்த மனுவில் தன் மீதான விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி அண்ணாமலை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் அண்ணாமலைக்கு நிவாரணம் வழங்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணையை தொடர்ந்து நடந்த கீழமை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அண்ணாமலை மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி அண்ணாமலைக்கு எதிராக விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்தனர். இநிலையில் இந்த வழக்கு இன்று (ஏப்.29) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் அண்ணாமலைக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கப்படுவதாக அறிவித்தனர். மேலும், எதிர் மனுதாரர் தரப்பில் அவதூறு பேச்சு குறித்து விரிவான அறிக்கை அளிக்க உத்தரவிட்டனர். மனுதாரர் வி.பியூஷ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெய்சிங், மனுதாரர் கால அவகாசம் கோருவதாக தெரிவித்தார்.
இதையடுத்து 6 வார காலம் அவகாசம் வழங்கிய நீதிபதிகள் வரும் செப்டம்பர் 9ஆம் தேதிக்கு வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஒத்திவைத்தனர். அதற்கு மனுதாரர் தரப்பில் அறிக்கை சமர்பிக்கக் கோரி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க : இந்தூர் காங்கிரஸ் வேட்பாளர் திடீர் வேட்புமனு வாபஸ்! பாஜகவில் இணைந்தாரா? - Indore Congress Candidate Join BJP