டெல்லி: மேற்கு வங்க மாநிலம், கொல்காத்தாவின், கர் அரசு மருத்துக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி அன்று பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
இந்த நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜேபி பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை இன்று விசாரித்தது.
அப்போது நீதிபதிகள், பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் ஏன் தாமதமாக முதல் தகவல் அறிக்கை பதிவானது? மருத்துவமனை நிர்வாகம் என்ன செய்து கொண்டிருந்தது என காட்டமாக கேள்வி எழுப்பி, மேற்கு வங்க அரசை கடுமையாக சாடினர். மேலும், மாநில அரசால் ஏன் சட்ட ஒழுங்கை பாதுகாக்க முடியாமல் போனது என்றும் கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக ஆகஸ்ட் 22 ஆம் தேதிக்குள் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும், மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் செயலர் அடங்கிய தேசிய பணிக்குழுவை அறிவித்த தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், மூன்று வாரங்களுக்குள் இடைக்கால அறிக்கையையும், இரண்டு மாதங்களில் விரிவான அறிக்கையையும் சமர்ப்பிக்குமாறு அந்த குழுவுக்கு உத்தரவிட்டார்.
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை சம்பவம் நாடு முழுக்கவுள்ள மருத்துவர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பக்கம், மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜியை ராஜினாமா செய்யக்கோரி பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.
மறு பக்கம், இளநிலை மருத்துவர்கள் கொல்கத்தா கர் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், மூத்த மருத்துவர்களின் பணிச்சுமை அதிகரித்துள்ளது. மேலும், அங்கு மருத்துவ சேவையும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மூடா ஊழல் விவகாரம்; சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது.. கர்நாடக உயர் நீதிமன்றம்!