டெல்லி: இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை வழங்கும் திட்டத்தைப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2018ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. இந்த தேர்தல் பத்திரத்திற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இந்த பத்திரத்தை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா, பி.ஆர்.கவாய் ஆகிய 5 பேர் கடந்த 2 ஆண்டுகளாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இதில் தேர்தல் பத்திரத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என கடந்த பிப்ரவரி 15ம் தேதி தேர்தல் பத்திரங்கள் இனி செல்லாது என தீர்ப்பு வழங்கினர்.
அதுமட்டுமின்றி மார்ச் 6ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம், பாரத் ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களை அளிக்க வேண்டும் எனவும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் இணையப் பக்கத்தில் வெளியிட வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், கடந்த 14ஆம் தேதி தேர்தல் பத்திர விவரங்கள் இணையதளத்தில் வெளியானது. அதில் அதிகப்படியாக பாஜக நன்கொடை பெற்றது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, கடந்த 15ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் பத்திர எண்களை ஏன் வெளியிடவில்லை என எஸ்.பி.ஐ.க்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அனைத்து விவரங்களையும் வெளியிட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.
இந்த நிலையில், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கு விசாரணை இன்று (மார்ச்.18) மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 5 பேர் கொண்ட நீதிபதி அமர்வில், உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்ட படி பத்திர எண்களை வெளியிட வேண்டும். தேர்தல் பத்திர வழக்கில் எஸ்.பி.ஐ.யின் செயல்பாடு நேர்மையானதாக இல்லை. ஒவ்வொரு பத்திரத்திலும் உள்ள எண்ணையும் ஏன் எஸ்.பி.ஐ வங்கி இன்னும் தெரிவிக்கவில்லை என கேள்வி எழுப்பியது.
மேலும், ஒவ்வொரு பத்திரத்திலும் உள்ள தனி அடையாள எண்ணைக் கட்டாயம் வெளியிட வேண்டும் என கூறி தேர்தல் பத்திர எண்கள் விவரங்களை மார்ச் 21ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என எஸ்பிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: ஐபிஎல் டிக்கெட் விற்பனை ஆன்லைனில் துவக்கம்... சத்தமே இல்லாமல் கட்டணம் உயர்வு!