மண்டி: எல்லைப் பாதுகாப்புப் படையின் முதல் பெண் துப்பாக்கி சுடும் வீராங்கனையாக சுமன் குமாரி(28) என்ற காவல் உதவி ஆய்வாளர் தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் சமீபத்தில் இந்தூரில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படையின், மத்திய ஆயுதங்கள் மற்றும் போர் திறன் பள்ளியில் (CSWT) எட்டு வார துப்பாக்கி சுடும் பயிற்சியை முடித்து பயிற்சியாளர் தரம் பெற்றுள்ளார்.
இமாச்சலப் பிரதேசம், மண்டி மாவட்டத்தை சேர்ந்தவர் சுமன் குமாரி. இவரது தந்தை தினேஷ் குமார் தாக்கூர், எலக்ட்ரீஷியனாக பணிபுரிகிறார். அவரது தாயார் மாயா தேவி. இவருக்கும் ஒரு சகோதரர் மற்றும் சகோதரி உள்ளனர். 2019 ஆம் ஆண்டு எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கான தேர்வினை இவர் எழுதியுள்ளார். 2021ல் நடைபெற்ற ஆட்சேர்ப்பில் எல்லைப் பாதுகாப்புப் படையில் இணைந்துள்ளார்.
சுமன் குமாரி, பஞ்சாபில் தனது படைப்பிரிவுடன் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், எல்லைக்கு அப்பால் இருந்து துப்பாக்கி தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். அதன்பிறகு, துப்பாக்கி சுடுதல் பயிற்சியை அவர் மேற்கொண்டுள்ளார். சுமன் குமாரியின் மன உறுதியைப் பார்த்து, துப்பாக்கி சுடுதல் பயிற்சி பற்றிய மேற்படிப்பை மேற்கொள்வதற்கு அவருடைய மேலதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
அதன்படி, 56 ஆண்கள் கொண்ட துப்பாக்கி சுடுதல் பயிற்சியில், தனது துணிச்சலை வெளிப்படுத்தி பயிற்சியை முடித்து, எல்லைப் பாதுகாப்புப் படையின் முதல் பெண் துப்பாக்கி சுடும் வீராங்கனையாக தரம் பெற்றுள்ளார் சுமன் குமாரி. இவர், ஆயுதமின்றி போரிடும் குழுவிலும் தகுதி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு பயிற்சி பெற்ற துப்பாக்கி சுடும் வீரர், SSG உட்பட மற்ற துப்பாக்கிகளுடன், மூன்று கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தில் இருந்து எதிரிகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்; 8.20 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர்!