பெங்களூரு: பிதார் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஸ்ரீநிவாஸ் (24). பெங்களூர் மஞ்சுநாத் நகரில் உள்ள தனியார் விடுதியில் தங்கி மென்பொருள் சார்ந்த படிப்பை படித்து வந்துள்ளார். இவர் நேற்று இரவு 8 மணியளவில் விடுதியில் உள்ள தனது அறையில் செல்போனிற்கு சார்ஜ் போட்டபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
அப்போது, அறையின் வெளியே இருந்த அவரது நண்பர், சிறிது நேரம் கழித்து இரவு உணவு உண்பதற்காக ஸ்ரீநிவாஸை அழைக்கச் சென்றுள்ளார். அப்போது தரையில் படுத்துக் கிடந்த ஸ்ரீநிவாஸை தொட்டு எழுப்பிய அவரது நண்பருக்கும் மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக ஸ்ரீநிவாஸின் நண்பர் உயிர் தப்பியுள்ளார்.
இந்நிலையில் சத்தம் கேட்டு அறைக்கு வந்த விடுதி ஊழியர், உடனடியாக பசவேஸ்வரா நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பேரின் வந்த போலீசார், ஸ்ரீநிவாஸின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இயற்கைக்கு மாறான மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.