மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சிவசேனா தலைவரின் பிஎம்டபிள்யு கார் மோதிய விபத்தில், இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த பெண் கார் பானட்டில் சிக்கி 100 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை, வோர்லி கொலிவடா பகுதியைச் சேர்ந்த காவேரி நக்வா என்ற பெண் தனது கணவர் பிரதிக் நக்வா என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் பயணித்துள்ளார். கணவன் - மனைவி இருவரும் காலை 5.30 மணி அளவில் மீன் வாங்கிக் கோண்டு அட்ரியா மால் அருகே தங்களது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது தீடீரென பிஎம்டபிள்யு சொகுசு கார் ஒன்று கணவன் மனைவி பயணித்த இரு சக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதி உள்ளது. இதில் கணவன் மற்றும் மனைவி இருவரும் கட்டுப்பாட்டை இழந்து கார் பானட்டின் மீது விழுந்தனர். இருப்பினும் கார் நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது.
காரின் வேகம் அதிகரிப்பதற்குள் கணவர் பானட்டில் இருந்து குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தொடர்ந்து அந்த பெண் கார் பானட்டில் சிக்கி கொண்ட நிலையில் 100 மீட்டர் தூரத்திற்கு அப்படியே இழுத்துச் செல்லப்பட்டு உள்ளார். ஒரு கட்டத்தில் கார் பானட்டில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெண் படுகாயம் அடைந்தார்.
கணவன் மனைவி இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சொகுசு கார் மும்பை பல்கர் மாவட்டத்தை சேர்ந்த சிவசேனா கட்சியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என போலீசார் விசாரணையில் தெரியவந்து உள்ளது.
விபத்து ஏற்படுத்திய கார் பல்கர் மாவட்டத்தின் சிவசேனா தலைவர் ராஜேஷ் ஷாவுக்கு சொந்தமானது என்றும் விபத்தின் போது காரில் ஓட்டுநர் மற்றும் ராஜேஷ் ஷாவின் மகன் மிஹிர் ஆகியோர் பயணித்ததும் தெரியவந்ததாக போலீசார் கூறியுள்ளனர். அதேநேரம் காரில் பின்பகுதி இருக்கையில் யார் பயணித்தது, இந்த விபத்தில் ராஜேஷ் ஷாவுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்த பல்வேறு கேள்விகளுக்கு பதில் தெரிய விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் விபத்து ஏற்படுத்திய சில மணி நேரத்தில் காரின் நம்பர் பிளேட் அகற்றப்பட்டதாகவும், ஆதாரங்களை அழிக்க பல்வேறு வேலைகள் நடந்து உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். வழக்கு தொடர்பாக ராஜேஷ் ஷாவை தடுப்பு காவலில் வைத்து விசாரித்து வரும் போலீசார் தலைமறைவான மிஹிர் மற்றும் கார் ஓட்டுநரை தொடர்ந்து தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.
இதனிடையே விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை சிவசேனா உத்தவ் அணியின் எம்எல்ஏ ஆதித்ய தாக்ரே நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் விபத்து ஏற்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அதேபோல் விபத்து ஏற்படுத்தியவர்கள் சொந்த கட்சியினராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஜார்கண்டில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து 3 பேர் பலி! தொடரும் மீட்பு பணி! - Jharkhand Building Collapses