டெல்லி: இந்திய தேசிய காங்கிரஸின் முன்னாள் தலைவரான சோனியா காந்தி மாநிலங்களவை பிரதிநிதியாக போட்டியிடுகிறாரா இல்லையா என்ற தகவல் அரசியல் களத்தில் தற்போது சூடுபிடித்துள்ளது.
தற்போது மாநிலங்களவையில் 56 இடங்கள் காலியாகவுள்ளன. அந்த இடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்புகளும் வெளியாக உள்ளன. அதற்கான தேர்தல் எனப் பார்க்கையில் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவிருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தான், மாநிலங்களவையில் மத்திய பிரதேச மாநிலத்துக்கான 5 இடங்கள் காலியாகின்றன.
இதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி அதன் பலத்தை தக்க வைத்துக் கொள்ள பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், கட்சியின் முன்னாள் தலைவரான சோனியாவை களமிறக்க ஆசைப்படுவதாக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
அதிலும், பிரதமர் பதவியே வேண்டாம் என்று உதறி, மக்களுக்காகவும், கட்சிக்காகவும் இன்றளவும் உழைத்து வரும் சோனியா காந்தி மட்டும்தான் மத்திய பிரதேச மக்களின் பிரதிநிதியாக இருக்க முழுதகுதி வாய்ந்தவர் என்ற கருத்தை முன்வைக்கின்றனர் அம்மாநில காங்கிரஸ் நிர்வாகிகள்.
காலியாகும் 5 இடங்களுக்கான காங்கிரஸின் திட்டம் என்ன..?: மத்திய பிரதேச மாநிலத்தைப் பொறுத்தவரையில் மாநிலங்களவையில் தற்போது 5 உறுப்பினர்களின் பதிவிக்காலம் முடிவடைகிறது. இதனால் அம்மாநிலத்தில் 5 இடங்கள் காலியாகும் நிலையில், அதற்கான தேர்தல் பிப். 27ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. காலியாகும் இந்த 5 இடங்களில் முன்னதாக 4 இடங்களில் பாஜகவும், ஒரு இடத்தில் காங்கிரஸ் பதவி வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
230 மொத்த உறுப்பினர்களில் 163 எம்எல்ஏ-க்களுடன் ஆட்சியை கைப்பற்றிய பாஜகவும், 66 எம்எல்ஏக்களுடன் காங்கிரஸ் பிரதான எதிர்கட்சியாக வலம் வரும் மத்திய பிரதேச சட்டப்பேரவையில், இந்தத் தேர்தல் அறிவிப்பு பெரும் பேசு பொருளாகி உள்ளது. ஏறக்குறைய இன்னும் இரண்டு மாதங்களில் நாடாளுமன்ற தேர்தலும் நடைபெறவிருப்பதையடுத்து அதற்கான முன்னேற்பாடுகளிலும் காங்கிரஸ் கமிட்டியினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
முன்னதாக உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு பதவியை கைப்பற்றிய சோனியா காந்தி தற்போது அந்த தொகுதியை தனது மகள் பிரியங்கா காந்தி வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. மக்களவை தேர்தலில் பிரியங்கா காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
இதையும் படிங்க: தமிழக அரசின் உரை புறக்கணிப்பா..? ஆளுநர் மாளிகையின் விளக்கம் என்ன?