டெல்லி: ராஜ்யசபா எம்பி-க்கள் 56 பேரின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், இதற்கான தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. எனவே, இதற்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய நாளை (பிப்.15) கடைசி நாளாகும். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு இன்று (பிப்.14) காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதற்காக அவர் ராஜஸ்தானில் இருந்து ஜெய்ப்பூர் புறப்பட்டுச் சென்றார். ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபாவுக்கு கடந்த முறை தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஓய்வு பெறுகிறார். இந்த நிலையில், ராஜஸ்தானில் இருந்து மாநிலங்கலவைத் தேர்தலுக்கு சோனியா காந்தி போட்டியிடுகிறார்.
அந்த வகையில், மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் 4 வேட்பாளர்களின் பெயரை காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதில் ராஜஸ்தானில் இருந்து சோனியா காந்தி போட்டியிடுவார் எனத் தெரிவித்துள்ளது. கடந்த 1998 முதல் 2022 வரை கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தி, ஐந்து முறை மக்களவை எம்.பி-யாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒரே நாடு ஒரே தேர்தலை திரும்பப் பெற தனித் தீர்மானம் - சட்டப்பேரவையில் முதலமைச்சர் தாக்கல்!