போபால்: மத்திய பிரதேச தலைநகர் போபாலில் இருந்து, சுமார் 150 கி.மீ தொலைவில் உள்ள ஹர்தா நகரின் புறநகர் பகுதியில் மகர்தா சாலையில் உள்ள பைராகர் பகுதியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில், இன்று (பிப்.6) காலை 11.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில், 63 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
-
#WATCH | Madhya Pradesh minister Uday Pratap Singh conducts an aerial survey of the firecracker factory in Harda, Madhya Pradesh where a massive explosion took place today.
— ANI (@ANI) February 6, 2024
Firefighting operation is underway at the factory. pic.twitter.com/496XoKjjle
தொடர்ந்து தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் குறித்து அறிந்த மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், மீட்பு பணிக்காக ஹெலிகாப்டர்களை ஏற்பாடு செய்ய இராணுவத்தை தொடர்பு கொண்டு வருவதாக தெரிவித்தார். மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாகவும், காயமடைந்தவர்களின் சிகிச்சைக்கான முழுச் செலவையும் மாநில அரசே ஏற்கும் என்றும் அறிவித்துள்ளார்.
மூத்த அமைச்சர் உதய் பிரதாப் சிங், கூடுதல் தலைமைச் செயலாளர் அஜித் கேசரி மற்றும் டைரக்டர் ஜெனரல் ஹோம் கார்டு அரவிந்த் குமார் ஆகியோரை ஹெலிகாப்டர் மூலமாக ஹர்தாவுக்கு விரைந்து செல்லுமாறு உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்தூர், போபால் மருத்துவமனைகளில் உள்ள தீக்காயப் பிரிவு மற்றும் எய்ம்ஸ் போன்றவற்றில் சிகிச்சைக்குத் தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறும் அறிவுறுத்தி உள்ளார். விபத்து நடைபெற்ற இடத்திற்கு 50க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தீ விபத்தில் காயமடைந்தவர்கள் ஹர்தா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், படுகாயமடைந்தவர்களை போபால் மருத்துவமனைக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் ஹர்தா மாவட்ட ஆட்சியர் ரிஷி கர்க் தெரிவித்துள்ளார். மேலும், தேசிய பேரிடர் மீட்புப் படை (National Disaster Response Force), மாநில பேரிடர் மீட்புப் படை (State Disaster Response Force), அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள், ஆம்புலன்ஸ்கள், பணியாளர்கள் ஆகியோர் மீட்புப் பணிக்காக வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் ஆலையில் அருகில் இருந்த 60க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து நாசமாயின. மேலும் பாதுகாப்பு கருதி 100க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள மக்கள் காலி செய்யப்பட்டுள்ளனர். அதிக அளவிலான இரு சக்கர வாகனங்கள் தீயில் கருகின. இந்த விபத்து குறித்து பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார். மேலும், இந்த விபத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சட்லஜ் நதியில் கவிழ்ந்த கார்.. சைதை துரைசாமி மகன் மாயம்; தகவல் கொடுத்தால் ரூ.1 கோடி சன்மானம் அறிவிப்பு!