லக்னோ: 18வது மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நேற்று (ஜூன்.4) நடைபெற்றது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க முனைப்பு காட்டி வருகிறது. மறுபுறம் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 232 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
2019 மக்களவை தேர்தலில் 303 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றிய பாஜக, தற்போதைய மக்களவை தேர்தலில் 240 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளை எதிர்நோக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பாஜகவின் வெற்றி வேட்கைக்கு முட்டுக் கட்டை போடும் மாநிலங்களாக உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் அமைந்தன.
உத்தர பிரதேசம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி 37 இடங்ளை கைப்பற்றி அதிர்ச்சி அளித்தது. காங்கிரஸ் கட்சி 6 இடங்களில் வெற்றி பெற்றது. இந்தியா கூட்டணி மட்டும் உத்தர பிரதேசம் மாநிலத்தில் 43 இடங்களை கைப்பற்றின. ஆனால் அங்கு ஆட்சியில் உள்ள பாஜகவுக்கு 33 இடங்களே கிடைத்தன.
கடந்த 2019 மக்களவை தேர்தலில் உத்தர பிரதேசம் மாநிலத்தில் பாஜக 63 இடங்களை கைப்பற்றி இருந்தது. ஆனால் 2024 மக்களவை தேர்தலில் ஏறத்தாழ 30 தொகுதிகளை பாஜக இழந்துள்ளது. இதுவே அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. மேலும், பாஜகவின் 7 அமைச்சர்கள் உத்தர பிரதேசத்தில் தோல்வி அடைந்தனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 26 எம்.பிக்கள் வெற்றி வாய்ப்பை இழந்து உள்ளனர். வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக பாஜகவின் முக்கிய முழக்கங்களில் ஒன்றாக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்பது இருந்தது. ஆனால் தற்போதைய மக்களவை தேர்தலில் பாஜக 63 இடங்களை இழந்துள்ளது.
வெற்றி வாய்ப்பை இழந்த அமைச்சர்கள்:
- ஸ்மிருதி ரானி அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் கிஷோரி லாலிடம் 1,67,196 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
- அஜய் குமார் மிஸ்ரா தெனி, லக்கிம்பூர் கேரி தொகுதியில் இருந்து 34,329 வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜவாதியின் உட்கர்ஷ் வர்மாவிடம் தோற்றார்.
- ஜலான் தொகுதியில் இருந்து பானு பிரதாப் வர்மா 53,898 வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜவாதி கட்சியின் நாராயண் தாஸ் அஹிர்வாரிடம் தோல்வி அடைந்தார்.
- முசாபர் நகரைச் சேர்ந்த சஞ்சீவ் பாலியன் 24,672 வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜவாதி ஹரேந்திர சிங் மாலிக்கிடம் தோல்வியடைந்தார்.
- மோகன்லால்கஞ்ச் தொகுதியில் கவுஷல் கிஷோர் சமாஜவாதி கட்சியின் ஆர்.கே.சௌத்ரியிடம் 70,292 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
- மகேந்திர நாத் பாண்டே 21,565 வாக்குகள் வித்தியாசத்தில் சண்டௌலி தொகுதியில் சமாஜவாதி கட்சியின் பிரஜேந்திர சிங்கிடம் தோல்வியடைந்தார்.
- சத்வி நிரஞ்சன் ஜோதி பதேபூர் தொகுதியில் 33,199 வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜவாதி கட்சியின் நரேஷ் உத்தம் படேலிடம் தோல்வியடைந்தார்.
பிரதமர் மோடியின் அமைச்சரவையில் யாரார் என்ன பொறுப்பு வகித்தனர்:
- சாத்வி நிரஞ்சன் ஜோதி ஊரக வளர்ச்சி இணை அமைச்சர்
- டாக்டர் மகேந்திர நாத் பாண்டே, கனரக தொழில்துறை இணை அமைச்சர்
- ஸ்மிருதி ரானி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர்
- மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா தெனி
- பானு பிரதாப் வர்மா, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை இணை அமைச்சர்
- சஞ்சீவ் பல்யான் வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர்
- கௌசல் கிஷோர் திறன் மேம்பாட்டு அமைச்சர்
அதேநேரம், பிரதமர் மோடி அமைச்சரவையில் இருந்த 5 அமைச்சர்கள் மட்டுமே தங்கள் பதவியை காப்பாற்றி உள்ளனர்.
வாரணாசியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி.
லக்னோவில் இருந்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.
ஆக்ராவைச் சேர்ந்த அமைச்சர் எஸ்பி பாகேல்.
மஹராஜ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி.
மதச்சார்பற்ற அப்னா தளம் கட்சியின் தலைவரும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சருமான அனுப்ரியா படேல்.
2024 மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் 47 எம்.பிக்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் 21 எம்பிக்கள் மட்டுமெ வெற்றி பெற்றனர். 26 எம்பிகள் தேர்தலில் படுதோல்வி அடைந்தனர். இதில் 7 மத்திய அமைச்சர்களும் அடங்குவர். உத்தர பிரதேசம் மாநிலத்தை பெரிதும் நம்பி இருந்த பிரதமர் மோடிக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தத் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: துணை முதலமைச்சர் பதவியில் இருந்து தேவேந்திர பட்நாவிஸ் விலகல்? - Devendra Fadnavis Resign