புதுடெல்லி: பைஜூ கல்வி நிறுவனத்துக்கு ஆதரவாக திவால் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்த தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
மொபைல் செயலி வாயிலாக ஆன்லைன் கல்வி நிறுவனமாக தொடங்கப்பட்ட பைஜூ நிறுவனம், மிகப்பெரிய நிறுவனமாக வளர்ச்சி பெற்றது. ஒரு கட்டத்தில் நிதி நிறுவனங்களிடம் பெற்ற கடன்களை திருப்பி செலுத்தாததால் பைஜூ நிறுவனம் சிக்கலில் சிக்கியது. மேலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் 2019ஆம் ஆண்டு பைஜூ நிறுவனம் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தில் மூன்று ஆண்டுகளுக்கு கையெழுத்திட்டது. பின்னர் இந்த ஒப்பந்தம் மேலும் ஒரு ஆண்டுக்கு நீடிக்கப்பட்டது. கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை ஸ்பான்சர்ஷிப்புக்கான தொகையை பைஜூ செலுத்தியது. ஆனால், அக்டோபர் 2022ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை பைஜூ நிறுவனம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு ஸ்பான்சர்ஷிப் தொகையைச் செலுத்தவில்லை.
எனவே, இந்த தொகையை பைஜூ நிறுவனத்திடம் இருந்து வசூலிக்க தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திடம் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முறையிட்டது. பைஜூ நிறுவனத்துக்கு எதிராக திவால் நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதையடுத்து தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதியன்று இந்திய கட்டுப்பாட்டு வாரியத்துக்கு ரூ.158.9 கோடி செட்டில்மென்ட் தொகையை செலுத்தும்படி பைஜூ நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. இதையடுத்து திவால் நடவடிக்கைகள் கைவிடப்பட்டன.
இதையும் படிங்க : நோட்டா விவகாரம்; தேர்தல் ஆணையம், மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!
இந்த தீர்ப்பு பைஜூ நிறுவனத்துக்கு பெரும் நிம்மதியை அளித்தது. எனினும், அமெரிக்காவை சேர்ந்த கிளாஸ் டிரஸ்ட் நிறுவனம் சார்பில் இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி அன்று நடந்த விசாரணையில், தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் மனசாட்சியமற்ற முறையில் நடந்து கொண்டதாக உச்ச நீதிமன்றம் கூறியது. மேலும், அதன் உத்தரவையும் நிறுத்தி வைத்தது.
இந்த நிலையில்தான் பைஜூ நிறுவனத்துக்கு ஆதரவாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்,ஜே.பி.பர்திவாலா,மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், பைஜூ அளித்த செட்டில்மெண்ட் தொகையான ரூ.158.9 கோடியை கடனளிப்போர் குழுவின் கணக்கில் செலுத்தும்படி கூறியுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் கவனத்தோடு செயல்படவில்லை என்றும் உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்