பாட்னா: 1998ஆம் ஆண்டு பீகார் முன்னாள் அமைச்சர் பிரிஜ் பிகாரி பிரசாத் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய முன்னாள் எம்எல்ஏ விஜய் குமார் சுக்லா என்ற முன்னா சுக்லா உட்பட இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எட்டுப்பேரையும் விடுவித்து பாட்னா உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை பகுதி அளவுக்கு மட்டுமே உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்ட உச்ச நீதிமன்றம், முன்னாள் எம்பி சூரஜ்பான் சிங் மற்றும் ஐந்து பேர் விடுவிக்கப்பட்டதை உறுதி செய்தது. அதே நேரத்தில் இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
முன்னா சுக்லா யார்?
முன்னாள் அமைச்சர் பிரிஜ் பிகாரி பிரசாத் கொல்லப்பட்ட வழக்கில் 55 வயதான முன்னா சுக்லாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளனது. இவர் மீது பல்வேறு குற்றவழக்குகள் உள்ளன. முன்னா சுக்லாவின் சகோதர ர்கள் சோட்டன் சுக்லா, புகுத்குன் சுக்லா ஆகியோர் மாபியா குழுக்களுடன் தொடர்புடையவர்கள். ரவுடிகளுக்குள் நேரிட்ட மோதலில் சோட்டன் சுக்லா கொலை செய்யப்பட்டார். கோபால்கஞ்ச் ஆட்சியர் ஜி.கிருஷ்ணய்யா கொல்லப்பட்ட வழக்கில் புகுத்குன் சுக்லா மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : 9 பக்தர்கள் உயிரை குடித்த டி.ஜே. வாகனம்.. பீகாரில் நிகழ்ந்த சோகம்!
இப்போது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னா சுக்லா வைசாலி மாவட்டத்தில் உள்ள லால்கஞ்ச் தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வைசாலி தொகுதியில் போட்டியிட்டார். எனினும் ஆர்ஜேடி வேட்பாளரிடம் தோற்றுப்போனார்.
26 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கொலை
ரப்ரி தேவி ஆட்சியில் அமைச்சராக இருந்த பிரிட்ஜ் பிகாரி பிரசாத் 1998ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் தேதி ஐஜிஐஎம்எஸ் வளாகத்தில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது கொல்லப்பட்டார். சம்பவத்தன்று அம்பாசிட்டர் கார் மற்றும் எஸ்யுவி காரில் வந்த 8 பேர் கார்களில் இருந்து இறங்கி பிரிட்ஜ் பிகாரி பிரசாத் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.