டெல்லி: இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு தொடர்பாக நடந்து வரும் சலசலப்புக்கு மத்தியில், கருணை மதிப்பெண்கள் பெற்ற 1,500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான மறுதேர்வுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஜூலை 6ஆம் தேதி நடைபெற உள்ள மருத்துவ கலந்தாய்வுக்கு தடை விதிக்கக் கோரிய மனுவையு ம் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
நீட் முறைகேடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் எஸ்விஎன் பாட்டியா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (ஜூன்.21) விசாரணைக்கு வந்தது. அப்போது நீட் தேர்வுக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர். மேலும், கருணை மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நடத்தப்படும் மறுதேர்வை ரத்து செய்யக் கோரி மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், வாதிட்டனர்.
மறுதேர்வு எழுத உள்ள மாணவர்கள் குறித்து எந்தவித வெளிப்படைத் தன்மை கொண்ட அறிக்கையை தேசிய தேர்வு முகமை வெளியிடவில்லை என்றும் இதனால் மீண்டும் குளறுபடிகள் ஏற்படக் கூடும் என்பதால் மறுதேர்வை ரத்து செய்யக் கோரினர். மேலும் தேர்வு எழுதும் ஆயிரத்து 563 மாணவர்களில் 753 பேர் ஏற்கனவே தேர்வில் தோல்வியடைந்து உள்ளதாகவும் மீண்டும் பரீட்சையில் தோற்றால் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும் என்றும் வழக்கறிஞர்கள் வலியுறுத்தினர்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் மறுதேர்வு நடத்த தடை விதிக்க முடியாது எனக் கூறினர். முன்னதாக நீட் தேர்வு முறைகேட்டை உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தனிக்குழு விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், முறைகேடு குறித்து விசாரணை நடத்தும் குழு எவ்வித தலையீடுகளும் இன்றி தனிச்சையாக செயல்படக் கூடிய அமைப்பாக இருக்க வேண்டும் என்றனர்.
மேலும், தேசிய தேர்வு முகமை எப்படி 1,563 மாணவர்களுக்கு மட்டும் மறுதேர்வு என்பதை முடிவு செய்தது, என்ன அளவுகோலை பின்பற்றி இந்த முடிவை எடுத்தது என்பது குறித்து விளக்க வேண்டும் என்றும், மறுதேர்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், நீட் கவுன்சிலிங்குக்கு தடை விதிக்க முடியாது என்றனர்.
நடப்பாண்டு நடைபெற்ற நீட் தேர்வுக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், முறைகேடுகள் குறித்து விசாரிக்க தனிச்சையாக செயல்படக் கூடிய விசாரணைக் குழு அமைப்பது குறித்து பதிலளிக்க தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய அரசுக்கு மீண்டும் நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டனர். நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக புதிதாக தொடர்ப்பட்ட மனுக்கள் குறித்தும் ஜூலை 8ஆம் தேதிக்குள் தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: நந்தமுரி பாலகிருஷ்ணா எம்எல்ஏவாக பதவியேற்பு! முதல் முறையாக சட்டப்பேரவை வந்தார் பவன் கல்யாண்! - Andra pradesh Assembly session