புதுடெல்லி: மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது. இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் கீழ் வரும் 77 சமூகங்களுக்கு மேற்கு வங்க அரசு இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டத்தை கொல்கத்தா உயர் நீதிமன்றம் கடந்த மே மாதம் ரத்து செய்தது. இதற்கு எதிராக மேற்கு வங்க அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த மேல்முறையீட்டு மனு இன்று உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் பி.ஆர்.கவை, கே.வி.விஸ்வநாதன் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மேற்கு வங்க அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், "கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உததரவால் மேற்கு வங்கத்தில் இந்த ஆண்டு முதல் கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கையில், வேலைவாய்ப்பில், பதவி உயர்வில், கல்வி உதவி வழங்குவதில் இட ஒதுக்கீடு மேற்கொள்ள முடியாத சூழல் உள்ளது.
மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. சமூகங்களில் பின்தங்கிய நிலையை அடிப்படையாகக் கொண்டே இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. எனவே, இட ஒதுக்கீடை உறுதி செய்யும் வகையில் உச்ச நீதிமன்றம் இடைகால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்," என்று வேண்டுகோள் விடுத்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி பி.ஆர்.கவை,"மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்க முடியாது," என்றார்.
இதையும் படிங்க: மாநில அரசு அனுமதியின்றி சுரங்க உரிமைகளை ஏலம் விடக்கூடாது - சட்டமன்றத்தில் தனித்தீர்மானம்
அப்போது வாதிட்ட கபில் சிபல், "இந்த இட ஒதுக்கீடு மதத்தின் அடிப்படையில் வழங்கப்படவிலலை. பின் தங்கிய நிலையை கருத்தில் கொண்டு வழங்கப்படுகிறது. இதனை நீதிமன்ற தீர்ப்பு உறுதி செய்துள்ளது. இந்துகள் மத்தியில் கூட பின்தங்கிய நிலையில் பல சமூகங்கள் உள்ளன. சமூகத்தின் அனைத்து மட்டத்திலும் பின்தங்கிய பிரிவினர் உள்ளனர். இங்கு மதம் என்ற அடிப்படையே எழவில்லை. அவர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தின் சமூகத்தினராக இருக்கின்றனர்.ஆனால் பின்தங்கிய நிலையில் உள்ளனர்," என்றார்.
ரங்கநாத் ஆணையத்தின் பரிந்துரையின்படி இது போன்ற இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதன் படி பல சமூகத்தினர் மத்திய அரசின் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றிருக்கின்றனர் என்ற வாதமும் உச்ச நீதிமன்றத்தில் வைக்கப்பட்டது. ஆந்திர அரசு இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இஸ்லாமியருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை ரத்து செய்த அந்த மாநில உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பதையும், அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதையும் கபில் சிபல் சுட்டிக்காட்டினார்.
இட ஒதுக்கீடுக்கு எதிர்ப்பு தெரிவிப்போர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிஎஸ் பட்வாலியா, "எந்த ஒரு தரவு இல்லாமலும், ஆய்வு மேற்கொள்ளப்படாமலும் பின்தங்கியோருக்கான ஆணையத்தை மீறி இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது," என்று கூறினார். அப்போது வாதிட்ட கபில் சிபல், "பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையம் பரிந்துரை செய்தது. மாநில அரசு அதனை அறிவிப்பு செய்தது. அதனை எப்படி உயர் நீதிமன்றம் ரத்து செய்யலாம்? ஆணையம் மாநில அரசுக்கு என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், சட்டம் ரத்து செய்யப்பட்டது முற்றிலும் தவறானது,"என்றார். இந்த வழக்கு மீதான விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி 7ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.