டெல்லி: ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவரும், ஜார்கண்ட் மாநில முதலமைச்சருமான ஹேமந்த் சோரன், தனது அதிகாரத்தைப் பயன்படுத்து அம்மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள பார்கைன் பகுதியில் போலி ஆவணங்கள் தயாரித்து 8.86 ஏக்கர் நிலத்தைப் பெற்றதாக அமலாக்கத்துறை கடந்த ஜனவரி 31ஆம் தேதி கைது செய்தது. இதனையடுத்து, இந்த வழக்கில் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கி அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, ஹேமந்த் சோரனுக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீன் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவால் மற்றும் கே.வி. விஸ்வநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஜூன் 28 அன்று ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு தகுந்த காரணங்களுக்காகவே வழங்கப்பட்டுள்ளது என்றும், அந்த தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்றும் கூறி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்தது.
முன்னதாக, ஜாமீன் பெற்ற ஹேமந்த் சோரன் ஜூலை 4ஆம் தேதி ஜார்கண்ட் மாநில முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும், இது மத்திய முகமையால் வேண்டும் என்றே பொய்யாக குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சோரனின் வழக்கறிஞர் வாதாடினார்.
மேலும், சோரனின் ஊடக ஆலோசகர் அபிஷேக் பிரசாத் மூலம் நிலத்தின் உண்மையான ஆவணங்களை ஹேமந்த் சோரன் மாற்ற முயற்சித்தார் எனவும் அமலாக்கத்துறை எடுத்துரைத்தது. அது மட்டுமல்லாமல், சோரனுக்கு பலமுறை அமலாக்கத்துறை இந்த விவகாரத்தில் சம்மன் அனுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜார்கண்ட் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் பதவியேற்பு!