டெல்லி: 2019ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் அமலில் இருந்த பிரிவு 370-ஐ ரத்து செய்தது, மத்திய அரசு. அதன்பின், ஜம்மு மற்றும் காஷ்மீரை இரண்டாகப் பிரித்தது. மத்திய அரசு பிரிவு 370-ஐ ரத்து செய்தது தவறு என உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், பிரிவு 370-ஐ ரத்து செய்தது செல்லும் என 2023 டிசம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஸ்ரீநகர் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, ஜம்மு காஷ்மீரில் பிரிவு 370 ரத்து செய்த பின்புதான் இங்கு சுதந்திரம் கிடைத்து சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடிகிறது என குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில், மகாராஷ்டிராவின் கோலாப்பூர் கல்லூரியில் பணிபுரியும் காஷ்மீர் பேராசிரியர் ஜாவேத் அகமது ஹசாம் என்பவர், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருக்கும் வாட்ஸ் ஆப் குரூப்பில், ஆகஸ்ட் 5 ஜம்மு காஷ்மீரின் கறுப்பு தினம் என்றும், ஆகஸ்ட் 14 பாகிஸ்தான் சுதந்திர தினம் என்றும் கருத்து பதிவிட்டு இருந்தார்.
இது தொடர்பாக மகாராஷ்டிரா காவல்துறை சார்பாக இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 153-ஏ கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், பேராசிரியர் தரப்பில் தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணை செய்த மும்பை நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனையடுத்து, பேராசிரியர் ஜாவேத் அகமது ஹசாம், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் உஜ்ஜல் புயான் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பிரிவு 370 ரத்தை எதிர்ப்பது மற்றும் விமர்சிப்பது தனி மனிதரின் வேதனையின் வெளிப்பாடாகும். அரசின் நடவடிக்கைகள் மீதான விமர்சனங்கள் அனைத்து இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றமாகக் கருதினால் ஜனநாயகம் நிலைக்காது.
மனுதாரர் கூறும் கருத்து மத, இன, மொழி, சாதி, சமூகங்களுக்கிடையே பகைமை வெறுப்பு மற்றும் தவறான உணர்வுகளைத் தூண்டுவதாக இல்லை. இது தனி மனிதரின் எதிர்ப்பு மட்டுமே. இது பேச்சு சுதந்திரத்தின் ஒரு அங்கம் மட்டுமே. எனவே, அரசின் முடிவில் தனக்கு மகிழ்ச்சியில்லை என தெரிவிக்க அவருக்கு உரிமை இருக்கிறது. மேலும், பாகிஸ்தான் மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவிப்பது நல்லெண்ண அடிப்படையிலான செயலாகும்.
இந்தியா 75 ஆண்டுகளுக்கு மேலாக ஜனநாயகக் குடியரசாக இருந்து வருகிறது. எனவே, தனிநபர்களில் வெறுப்புணர்வையோ அல்லது தவறான எண்ணத்தையோ வளர்த்துக் கொள்வதால், பிரிவு 153-ஏ படி வழக்கு சேர்ப்பது சரியானதாக இருக்காது” என தெரிவித்து பேராசிரியர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: ஆளுநர் ஆர்.என்.ரவி அய்யா வைகுண்டர் பற்றி பேசிய கருத்துகளுக்கு கிளம்பிய எதிர்ப்புகளும், ஆதரவுகளும்!