அகமதாபாத்: நீதித் துறை அதிகாரிகளின் ஆண்டு மாநாடு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டில் 'நம்பிக்கை பற்றாக்குறை: நீதி அமைப்புகளின் நம்பகத்தன்மை சிதைத்தலை எதிர்த்துப் போராடும் வழிமுறைகள்' என்ற தலைப்பில் உச்ச நீதிமன்ற நீதிபதி கவாய் பேசியது:
நீதித் துறை நெறிமுறைகளும், ஒருமைப்பாடும் நீதி பரிபாலன முறையின் நம்பகத்தன்மையை காக்கும் அடிப்படை தூண்களாகும். நீதிமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் ஒரு நீதிபதியின் நடத்தையானது நீதித்துறை நெறிமுறைகளின் மிக உயர்ந்த தரத்துடன் இணக்கமாக இருக்க வேண்டும். நீதிமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ஒர் அரசியல்வாதி அல்லது அரசு அதிகாரியை ஒரு நீதிபதி பாராட்டி பேசினால், அது நீதித் துறை மீதான மக்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் பாதிக்கும்.
உதாரணமாக, அமெரிக்க அதிபர் வேட்பாளர் குறித்து அந்நாட்டின் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் அண்மையில் விமர்சித்து பேசினார். இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இதேபோல் உடனடியாக தேர்தலில் போட்டியிடுவதற்காக ஒரு நீதிபதி தமது பதவியை ராஜினாமா செய்தால், அது அவரது பாரபட்சமற்றத்தன்மை குறித்த பொதுமக்களின் பார்வையை பாதிக்கக்கூடும்.
குறிப்பாக பாலினம், மதம், ஜாதி, அரசியல் போன்ற மிகவும் உணர்வுபூர்வமான வழக்குகளில், அவற்றின் விசாரணை வரம்பை தாண்டி நீதிபதிகள் விரிவான கருத்துகளை கூறுவது வருந்தத்தக்க விஷயம்.
இதையும் படிங்க: குழந்தை திருமணத்தை தடுக்க கூடுதல் விழிப்புணர்வு தேவை - சுப்ரீம் கோர்ட் நீதிபதி அறிவுரை!
நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கை குறையாமல் பாதுகாக்கப்பட வேண்டும். இல்லையெனில் அவர்கள் முறையான நீதி அமைப்புக்கு வெளியே நீதியை தேட வேண்டிய நிலைக்கு தள்ளப்படவாம்.
ஊழல், கும்பல் நீதி போன்ற காரணங்களால் நீதித் துறை மீதான மக்களின் நம்பிக்கை குறையலாம். இது சமூகத்தில் சட்டம் - ஒழுங்கு சீ்ர்குலைய வழிவகுக்கும், இதனால் பொதுமக்கள் வழக்கு தொடரவும், மேல்முறையீட செய்யவும் தயங்குகிறார்கள். நீளும் வழக்கு விசாரணை மற்றும் மெதுவான நீதி விசாரணை நடைமுறைகள் நீதி அமைப்பின் மீது பொதுமக்களுக்கு அதிருப்தி.யை ஏற்படுகிறது.
நீதி வழங்குவதில் ஏற்படும் தாமதம் நியாயமான விசாரணையை உறுதி செய்வதை கடினமாக்குகிறது மற்றும் நீதி அமைப்பு மீதான நம்பிக்கையை சிதைக்கிறது. அநீதி மற்றும் திறமையின்மை பற்றிய கருத்துகளை உருவாக்குகிறது. குற்றச்சாட்டப்பவர்கள் மீதான விசாரணை தாமதமாகும்பட்சத்தில், அதன்பின அவர் நிரபராதி என்று தெரிய வந்தால் அது அவரை காயப்படுத்தும் என்பதுடன், சிறைச்சாலைகளில் கூட்டம் நிரம்பிய வழியவும் காரணமாகிறது.
அரசியல், நிர்வாக ரீதியான தலையீடு போன்ற நீதித்துறையின் சுயாட்சி மீதான எந்தவொரு அத்துமீறலும், பாரபட்சமற்ற நீதி என்ற கருத்தையே சிதைத்துவிடும். காணொளிக் காட்சி வாயிலான விசாரணை மற்றும் அரசியலமைப்பு சாசன அமர்வின் வழக்கு விசாரணைகள் நேரடி ஒளிபரப்பு போன்ற முன்னெடுப்புகள் வெளிப்படைத்தன்மை மற்றும் எளிதான அணுகலை அதிகரிப்பதற்கான படிகளாகும்.
இதன் மூலம் நீதிபதிகள் குறித்த தவறான புரிதலுக்கு வழிவகுக்கவும் வாய்ப்புகள் உள்ளதால், நீதிமன்ற நடவடிக்கைகளின் நேரடி ஒளிபரப்பில் பொருத்தமான வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி கவாய் பேசினார்.